ஐஜிபி: செம்பூர்னாவில் திடீர்தாக்குதலில் போலீசார் ஐவர் கொல்லப்பட்டனர்

1igpசாபா, செம்பூர்னாவில் ஆயுதக்கும்பல் ஒன்று பதுங்கியிருந்து தாக்கியதில் ஐந்து போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டதை தேசிய போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் இன்று உறுதிப்படுத்தினார்.

“நேற்று மாலை செம்பூர்னாவின் கம்போங் ஸ்ரீஜெயா சிமுனுலில் ஆயுதக்கும்பல் ஒன்று நடமாடுவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது.

“அத்தகவலைக் கேட்டு செம்பூர்னா போலீஸ் தலைமையகத்திலிருந்து ஒரு போலீஸ் குழு அங்கு சென்றபோது திடீர்த்தாக்குதலுக்கு இலக்கானது”, என்று லாஹாட் டத்து, பெல்டா சஹாபாட்டில் செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் கூறினார்.

அப்போது நடந்த சண்டையில் துப்பாக்கிக்காரர்களில் இருவர் கொல்லப்பட்டனர். எஞ்சியுள்ளோரைப் பிடிப்பதற்காக போலீஸ் கடல்நீருக்கு உயரே தூக்கிக்கட்டப்பட்ட வீடுகளைக் கொண்ட அந்தக் கிராமத்தைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

வெள்ளிக்கிழமை லாஹாட் டத்துவில் சூலு சுல்தானுக்கு விசுவாசமான ஆயுதக் கும்பலுக்குடன் நிகழ்ந்த மோதலில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டதை அடுத்து செம்பூர்னா இது நிகழ்ந்துள்ளது.

கம்போங் ஸ்ரீஜெயா சிமுனுலுலில் உள்ள கும்பலுக்கும் லாஹாட் டத்து சண்டையில் ஈடுபட்ட கும்பலுக்குமிடையில் தொடர்பு உண்டா என்பது ஆராயப்பட்டு வருவதாக இஸ்மாயில் கூறினார்.

இரண்டு நாள்களில் போலீசார் எழுவர் பலியாகியுள்ளனர். இது, கம்முனிஸ்ட் பயங்கரவாதிகளுடனான சண்டைக்குப் பிறகு மலேசிய பாதுகாப்புப் படையினர்மீது மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான தாக்குதலாக தெரிகிறது.