இன்று நண்பகல் மணி 12.35 க்கு சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சே கோலாலம்பூர், ஸ்கோட் தெருவில், கந்தசாமி கோயிலின் முன் நடுச்சந்தியில் தூக்கிலிடப்பட்டார்!
சிறீலங்கா அரசாங்கத்தையும், அதன் அதிபர் மகிந்த ராஜபக்சேயையும் கண்டித்து, சிறீலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஜெனிவா மனித உரிமை மன்றத்தில் மலேசிய அரசாங்கம் முன்மொழிய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்று காலை மணி 11.00 அளவில் கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா தாமரை தடாகத்திலிருந்து செம்பருத்தி இணையத்தளத்தின் ஏற்பாட்டில் தொடங்கிய கண்டன ஊர்வலம் ஸ்கோட் தெரு முனையை வந்தடைந்ததும் ராஜபக்சேவுக்கு எதிரான மக்கள் நீதிமன்ற விசாரணை தொடங்கியது.
சிறீலங்கா தமிழர்களுக்கு எதிராக ராஜபக்சே அரசாங்கம் நடத்திய தமிழ் இன அழிப்பு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆள்கடத்தில், மனித உரிமை மீறல்கள், மனித உரிமை சட்டங்களுக்கு முரணான செயல்பாடுகள், போர் குற்றங்கள் ஆகியவற்றை அவர் அதிபர் மற்றும் முப்படைகளின் தலைவர் என்ற முறையில் புரிந்துள்ளதாக அவர் மீது இன்று அம்முச்சந்தியில் செயல்பட்ட மக்கள் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டது. பின்னர், ராஜசபக்சே குற்றச்சாட்டை மறுத்து தற்காப்பு வாதம் செய்யவில்லை. மேலும், அவருக்காக தற்காப்பு வாதம் புரிய எந்த வழக்குரைஞரும் முன்வரவில்லை!
ராஜபக்சேவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து அவர் சாகும் வரையில் தூக்கில் தொங்விடுமாறு ஸ்கோட் தெரு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இத்தீர்ப்பு உடனடியாக அமலாக்கம் செய்யப்பட்டது. தீர்ப்பு அறிவிக்கப்பட்டவுடன் அங்கு தயாராக இருந்த வேனில் அவர் ஏற்றப்பட்டு தூக்கு மரக் கயிற்றின் சுறுக்கில் அவரது கழுத்து நுழைக்கப்பட்டது.
ஒன்று, இரண்டு, மூன்று என்ற முழக்கத்துடன் அவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது!