இன்றைய உலகில் மிகக் கொடூரமான இன ஒழிப்பு, தமிழ் இன ஒழிப்பு, அரசாங்கமான சிறீலங்கா அரசாங்கத்திற்கு கண்டனம் தெரிவிக்கவும், அக்கொடிய சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக ஐநா மனித உரிமை மன்றத்தில் மலேசிய அரசாங்கம் ஒரு தீர்மானத்தை முன்வைக்க வேண்டும் என்று மலேசிய அரசாங்கத்தை கேட்டுக்கொள்ளவும் கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியாவில் ஒரு தமிழர் பேரணிக்கு இன்று காலையில் செம்பருத்தி.கோம் ஏற்பாடு செய்திருந்தது.
இன்று காலை மணி 10.00 லிருந்து லிட்டல் இந்தியா தாமரை தடாகத்தைச் சுற்றி மக்கள் கூடத் தொடங்கினர். பெரும்பாலோனார் ஏற்பாட்டாளர்கள் கேட்டுகொண்டதற்கிணங்க கருப்பு உடை அணிந்திருந்தனர். பெண்கள் வழக்கத்திற்கு மாறாக அதிகமாகக் காணப்பட்டனர். இளைஞர்கள், சிறுவர்கள், முதியவர்கள், ஊனமுற்று தள்ளுவண்டியில் அமர்ந்திருந்தவர்கள், இதர ஆர்வலர்கள் ஆகியரோடு ஊடகத்தினரும் அங்கு கூடத் தொடங்கினர்.
அழையா விருந்தாளி!
பல்வேறு அரசு சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிகளுடன் தமிழ் அறவாரியத்தின் தலைவர் சி.பசுபதி மற்றும் அந்த வாரியத்தின் நிருவாகக்குழு உறுப்பினர்களும் அங்கு முன்னதாகவே வந்து விட்டனர்.
நியட் தலைவர் தஸ்லிம், முன்னாள் செனட்டர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன், தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் மா. மனோகரன், நகராட்சி உறுப்பினர்கள் ஆகியோரோடு ஓர் அழையா விருந்தாளியும் தீடீர் என அங்கு தோன்றினார்.
அத்திடீர் விருந்தாளி அமைதியாக அங்கு வந்து அங்கிருந்த ஒருவரது கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை இழுத்து பிடிங்கிக் கொண்டு அவசரப்படாமல், அமைதியாக, எவ்வித கூச்சலும் எதிர்ப்பும் இல்லாமல் சங்கிலியுடன் அங்கிருந்து நழுவி விட்டார். இது இந்நாட்டில் தமிழர்களின் 50 ஆண்டுகளுக்கு மேலான விழிப்பு நிலைக்கு அவர் வழங்கிய சான்று!
செந்தமிழ்
அச்சம்பவம் பற்றி அங்கு கூடியிருந்தவர்களில் சிலர் கேள்விப்பட்டு பேசிக் கொண்டிருக்கையில், செந்தமிழ் நாளிதழ் இலவசமாக விநியோகிக்கப்பட்டது. தேர்தல் கால இலவச ஊழல் நோய் அங்கும் பரவிற்று.
சிறீலங்கா அரசாங்க தமிழ் இன அழிப்பு நடவடிக்கைகளைச் சித்தரிக்கும் துண்டு பதாதைகள் தாமரை தடாகத்தைச் சுற்றிலும் வைக்கப்பட்டிருந்ததோடு பல இதர பதாதைகளையும் மக்கள் ஏந்தி நின்றனர்.
காலை மணி சுமார் 11.00 அளவில், தமிழர் மக்கள் பேரணி தொடங்கியது. பிரிக்பீல்ட்ஸ்சின் பல்வேறு சாலைகளின் வழியாக நகர்ந்த அப்பேரணியாளர்கள் சிறிலாங்கா அதிபர் ராஜபக்சேயின் கொடும்பாவியை சுமந்து சென்றதுடன் அந்த அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறு சுலோகங்களை விடாது எழுப்பிக் கொண்டிருந்தனர்.
மலேசிய அரசாங்கம் சிறீலாங்காவுக்கு எதிராகத் தீர்மானம் கொணர வேண்டும் என்றும் சிறீலங்காவை காமன்வெல்த் அமைப்பிலிருந்து அகற்ற வேண்டும் என்றும் தொடர்ந்து குரல் எழுப்பினர்.
அப்பேரணியில் பெண்களும், சிறுவர்களும், ஊனமுற்றவர்களும், நகராட்சி, நாடாளுமன்ற உறுப்பினர்களும், இதர் அமைப்புகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் பங்கேற்றனர். பேரணியை முன்னின்று வழிநடத்தியவர்களில் சுவாராம் தலைவர் கா.ஆறுமுகம், காமாட்சி ஆகியோரும் அடங்குவர்.
கோயில் உண்டு, இடமில்லை
இன்று நடந்த பிரிக்பீல்ட்ஸ் சிறீலங்கா எதிர்ப்பு பேரணி பிரிக்பீல்ட்ஸ் சாலைகளில் காணப்பட்டவர்களிடையே வியப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது என்று கூறலாம்.
கடைகளில், உணவகங்களில் இருந்தவர்கள் வெளியில் ஓடி வந்து பேரணியை பார்த்தனர். சாலைகளின் இருபுறங்களிலும் நடமாடியவர்களில் சிலர் ஆதரவு தெரிவித்தனர். மற்றவர்களில் பலர் படம் எடுத்தனர். சுமார் 800 பேர் இப்பேரணியில் பங்கேற்றனர்.
இப்பேரணியின் போது போலீசார் வழங்கிய ஒத்துழைப்பு பாராட்டத்தக்கதாகும்.
இறுதியில், பேரணி ஸ்கோட் தெரு கந்தசாமி கோயிலின் முன் வந்து நின்றது. அங்கு வந்ததும் மக்கள் கலா மண்டபத்திற்குள் சென்று அமரலாம் என்று எதிர்பார்த்தனர். ஆனால், கூட்டத்தினர் அக்கோயிலுக்கு முன் நடுச்சந்தியில் நின்று கொண்டே அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்க வேண்டியதாயிற்று.
அங்கு நிறுத்தப்பட்டிருந்த வேன் தூக்கு மேடையாகியது. பால் சின்னப்பன், இளந்தமிழ், சி.பசுபதி, மனோகரன், டாக்டர் ஐயங்கரன், இராமகிருஷ்ணன், திருமாவளவன் மற்றும் பொன்னரங்கன் ஆகியோர் சுருக்கமாக சிறீலங்காவுக்கு எதிரான தமிழர் போராட்டம் ஏன் என்பதையும், அது தொடர வேண்டும் என்பதையும் கூறினர். கமாட்சி, காசி ஆனந்தனின் கவிதை ஒன்றை உணர்ச்சி பொங்க வாசித்தார்.
மரண தண்டனை
இறுதியில், இப்பேரணியை முன்னின்று நடத்திய கா.ஆறுமுகம் பேரணியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார்.
இப்பேரணி நடத்தப்படுவதின் முக்கியத்துவத்தை விளக்கிய அவர், சிறீலங்கா உலக மனித உரிமை அமைப்பால் கண்டிக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை ஜெனிவாவில் மேற்கொள்ளும் நாடுகளில் நமது நாடான மலேசியா முதன்மையான பங்கை ஆற்ற வேண்டும் என்பதை வலியுறுத்துவது இப்பேரணியின் தலையாய நோக்கம் என்றார்.
மலேசியா ஆற்ற வேண்டிய இரு முக்கிய கடமைகள் குறித்த இரு தீர்மானங்களை அவர் முன்மொழிந்தார்:
1, சிறீலங்காவை கண்டிக்கும் தீர்மானத்தை ஐநா மனித உரிமை மன்றத்தின் முன்மொழிய மலேசிய அரசாங்கம் நடவடிக்கையில் உடனடியாக இறங்க வேண்டும்.
2. சிறீலங்காவை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்குவதற்கு மலேசியா அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்விரு தீர்மானங்களுக்கும் அங்கு குழுமியிருந்தவர்கள் பெருத்த ஆரவாரத்துடன் ஆதரவு தெரிவித்தனர்.
இதனைத் தொடார்ந்து, ஸ்கோட் தெரு மக்கள் நீதிமன்றம் ராஜபக்சேவுக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள தமிழ் இன ஒழிப்பு மற்றும் போர் குற்றங்கள் மீதான விசாரணையைத் தொடங்கியது.
விசாரணை முடிந்தவுடன், ஸ்கோட் தெரு மக்கள் நீதிமன்றம் ராஜபக்சே குற்றவாளி எனத் தீர்ப்பளித்து அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
ஸ்கோட் தெரு மக்கள் நீதிமன்ற தீர்ப்பின்படி ராஜபக்சே அத்தெருவின் நடுசந்தியில் உடனடியாகத் தூக்கிலிடப்பட்டார்!