இப்ராகிம் அலிமீது வழக்கு தொடர அனுமதி அளிக்கப்பட்டது

1caseஒரு நீதிபதியின் தீர்ப்பு குறித்து ஒரு வலைத்தளத்தில் தேவையற்ற கருத்துகளைத் தெரிவித்ததற்காக மலாய் உரிமைக்காக போராடும் பெர்காசாவின் தலைவர் இப்ராகிம் அலிக்கும் ஒரு வலைப்பதிவருக்கும் எதிராக நீதிமன்றத்தை அவமதித்ததாக வழக்கு தொடர கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

வழக்கு தொடர அனுமதி கேட்டுச் செய்யப்பட்டிருந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜான் லூயிஸ் ஓ’ஹாரா, மார்ச் 21-இல் அதன்மீது தொடக்கநிலை விசாரணை நடைபெற நாளும் குறித்தார்.

1case1 sivaசுபாங் எம்பி சிவராசாவும் (இடம்)  பிகேஆர் உதவித் தலைவர் என். சுரேந்திரனும்  ஜனவரி 17-இல் அம்மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், வலைப்பதிவர் சைனுதின் சாலேயும் இப்ராகிமும் நீதிமன்றத்தை அவமதித்ததாக அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

சைனுடின், உயர் நீதிமன்ற  நீதிபதி வி.டி, சிங்கம் குறித்து இழிவாகக் கருத்துரைத்து தம் வலைப்பதிவில் ஒரு கட்டுரையைப் பதிவிட்டிருந்தார். அதை பெர்காசா அதன் வலைத்தளத்தில் இணைத்துக்கொண்டது.

பெர்காசா வலைத்தளத்தில் ஜனவரி 7-இல் வெளியிடப்பட்ட அக்கட்டுரை, உத்துசான் மலேசியா மீதான அன்வார் இப்ராகிமின் அவதூறு வழக்கு விசாரணையில் நீதிபதி சிங்கம் நேர்மையாக நடந்து கொண்டாரா என்று கேள்வி எழுப்பியதுடன் அவரது தீர்ப்பு அவர் மாற்றரசுக் கட்சிக்கு ஆதரவானவர் போல் காண்பிப்பதாகவும் கூறியது.

ஓரினச் சேர்க்கை, பெண்விழைபெண், திருநங்கையர் போன்றவற்றில் அவரின் கருத்தென்ன என்றும் அக்கட்டுரை வினவியது. அத்துடன் நீதிபதி கட்டை பிரம்மச்சாரி என்பதையும் குறிப்பிட்டிருந்தது.

இப்ராகிமுக்கு மன்னிப்பு கேட்க விருப்பம்

1case2 aliஇவ்விவகாரம் தொடர்பில் இப்ராகிம், அன்வாரிடத்திலும் சிங்கத்திடமும் மன்னிப்புக் கேட்க விரும்புவதை ஓ’ஹாராவிடம் தெரிவித்ததாக சிவராசா கூறினார்.

இப்ராகிம் மன்னிப்பு கேட்க விரும்புவதை அவரின் வழக்குரைஞர் தம்மிடம் தெரியப்படுத்தியதாக அவர் சொன்னார்.

“ஆனால், இப்ராகிமால் இன்று நீதிமன்றத்துக்கு வர இயலவில்லை. அதனால், வழக்கை விசாரணைக்குக் கொண்டு செல்ல நீதிபதி முடிவு செய்தார். இதற்கு சட்டத்துறை தலைவர் அலுவலகமும் வழக்குரைஞர் மன்றமும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

“இப்ராகிம் விரும்பினால் அடுத்த கட்ட அமர்வில் வந்து மன்னிப்பு கேட்கலாம் என்று ஓ’ஹாரா கூறினார்”, என்று சிவராசா கூறினார்..