தமிழ்ப் பேரவை மலேசியா பெர்ஹாட்டின் வாரிய உறுப்பினர் கா. ஆறுமுகத்திற்கு எதிராக மார்ச் 1 இல் செய்யப்பட்ட போலீஸ் புகார் மற்றும் அச்செய்தி மலேசிய நண்பன் மார்ச் 2 பதிப்பில் பெரிய அளவில் வெளியிடப்பட்டிருந்தது தீய நோக்கம் கொண்டது என்று தமிழ்ப் பேரவை தலைவர் மருத்துவர் நா. ஐயங்கரன் இன்று பிற்பகல் கோலாலம்பூரில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். Video | 4:56min
இப்புகாரைச் செய்தவர் முரளி த/பெ சுப்ரமணியம் என்பவர். இவர் பெர்சத்துவான் தமிழன் மலேசியா, பெர்சத்துவான் மக்கள் குரல் எங்கள் சக்தி மற்றும் பல இதர என்ஜியோக்களின் பிரதிநிதி என்று கூறிக்கொண்டுள்ளார்.
முரளி செய்த போலீஸ் புகாரில் இரு கூறுகள் இருக்கின்றன. முதலாவது, 2012 ஆம் ஆண்டில், கூட்டரசு பிரதேச துணை அமைச்சரிடமிருந்து “யுஎஸ் $1.0 மில்லியனுக்கான காசோலையை கா. ஆறுமுகம் பெற்றுக்கொண்டதாக கூறுகிறார். அந்த யுஎஸ் $1.0 மில்லியன் உண்மையிலேயே சிறீலங்கா போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவுவதற்காக பயன்படுத்தப்பட்டதா என்பதை உறுதிப்படுத்துவதற்கு போலீஸ் ஆறுமுகத்தை விசாரிக்க வேண்டும்” என்பதாகும்.
இரண்டாவது, “நிரந்தர வேலை ஏதும் இல்லாத கா. ஆறுமுகம் எவ்வாறு பெருமளவில் சொத்துக்களைச் சேர்த்துள்ளார் என்பதையும் விசாரிக்க வேண்டும்.”
ஜூன் 20, 2012 இல், துணை அமைச்சர் எம். சரவணன் யுஎஸ் $1.0 மில்லியனுக்கான மாதிரி காசோலையை தேவான் பண்டாராயா கோலாலம்பூரில் வழங்கிய போது தமிழ்ப் பேரவை மலேசியா பெர்ஹாட்டின் இதர உறுப்பினர்களுடன் கா. ஆறுமுகமும் உடனிருந்தார் என்று ஐயங்கரன் கூறினார்.
இந்த நன்கொடை எந்த ஒரு தனிப்பட்ட நபரின் உபயோகத்திற்காக அளிக்கப்பட்டதல்ல என்பதை வலியுறுத்திய ஐயங்கரன், “இந்த நன்கொடை சிறீலங்கா போரில் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மறுசீரமைப்பு செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது” என்று மேலும் கூறினார்.
நன்கொடையாக அளிக்கப்பட்ட ரிம 3.2 மில்லியன் கா.ஆறுமுகத்திடம் வழங்கப்படவில்லை. “மலேசியா அரசாங்கம் நன்கொடையாக அளித்த நிதியான ரிம 3.2 மில்லியன் டெலிகிராபிக் மாற்றம் வழியாக ஜூலை 31, 2012 இல் தமிழ்ப் பேரவை மலேசியா பெர்ஹாட் பெற்றுக் கொண்டது”, என்பதை ஐயங்கரன் உறுதிப்படுத்தினார்.
இந்த நன்கொடை எந்த ஒரு தனி நபரையும் சீமானாக்குவதற்காக வழங்கப்படவில்லை. சிறீலங்கா போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மலேசிய அரசாங்கம் வழங்கிய நன்கொடை இது என்பதை வலியுறுத்திய ஐயங்கரன், இதற்கு தவறாமல் கணக்கும் காட்டப்படுகிறது என்றார்.
“சிறீலங்கா போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அமல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு செயல்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து தமிழ்ப் பேரவை மலேசியா பெர்ஹாட் மலேசிய அரசாங்கத்திற்கு அவ்வப்போது தகவல் அளித்து வருகிறது”, என்றாரவர்.
மேலும், “தமிழ்ப் பேரவை வெளியிடும் காசோலைகளில் கா.ஆறுமுகம் கையொப்பமிடுபவர் அல்லர்”, என்பதை அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தமிழ்ப் பேரவையின் பொருளாளர் தகுதி பெற்ற கணக்கராவார். அவர் தமிழ்ப் பேரவையின் கணக்கை மலேசியாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் தரத்திற்கேற்ப பராமரித்து வருகிறார். தமிழ்ப் பேரவை நிருவாக வாரியத்தின் உறுப்பினர்கள் குறைகூற முடியாத நாணயம் வாய்ந்த மூத்த தொழிலியல் வல்லுனர்களாவர். அவர்கள் அனைத்து நிதி உதவிகளையும் மிகுந்த கவனத்துடன் கட்டிக் காப்பதுடன் நிதி பட்டுவாடா செய்வதில் கடுமையான நடைமுறைகளைக் கடைபிடிக்கின்றனர் என்று பெருமையுடன் கூறினார்.
இன்று நடந்த அச்செய்தியாளர் கூட்டத்தில் பேரவைத் தலைவர் நா.ஐயங்கரனுடன் தமிழ்ப் பேரவை வாரிய உறுப்பினர்கள் பலரும் இருந்தனர். அவர்களுடன் கா.ஆறுமுகமும் இருந்தார்.
தமிழ்ப் பேரவையின் கணக்கு அறிக்கைகளை ஆய்வு செய்வதற்கு தயங்காமல் முன்வருமாறு அவர் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். தமிழ்ப் பேரவை அதன் கணக்கை கையாளும் முறையை விவரித்த அவர், நிறுவன நிருவாக முறைகளுக்கு உட்பட்டு, தமிழ்ப் பேரவை மலேசியா பெர்ஹாட் அதன் ஆண்டுக் கணக்கை கணக்காய்வு செய்து அது சம்பந்தப்பட்ட ஆவணங்களை மலேசிய நிறுவனங்கள் ஆணையத்திடம் (எஸ்எஸ்எம்) தாக்கல் செய்திருக்கிறது. பொது மக்கள் தமிழ்ப் பேரவை மலேசியா பெர்ஹாட்டின் கணக்காய்வு செய்யப்பட்ட கணக்கு அறிக்கையை எஸ்எஸ்எம்முடன் தொடர்பு கொண்டு பரிசீலிக்கலாம் என்றார்.
செய்யப்பட்டுள்ள போலீஸ் புகாரின் உள்நோக்கம் குறித்து கேள்வி எழுப்பிய ஐயங்கரன், “முரளி செய்துள்ள போலீஸ் புகாரையும், அதன் பின்னர் இவ்விவகாரத்தை பெரிது படுத்தி வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையையும் தமிழ்ப் பேரவை மலேசியா பெர்ஹாட் பொறுப்பற்ற, தீய நோக்கம் கொண்ட, எந்த ஒரு நற்கூறுமற்றதாகக் கருதுகிறது”, என்றார்.
மேலும், “இது தமிழ்ப் பேரவை மலேசியா பெர்ஹாட் மேற்கொண்டுள்ள உன்னத இலட்சியத்திற்கு ஊறு விளைவிப்பதாகும்”, என்று ஐயங்கரன் கூறினார்.
“தமிழ்ப் பேரவை மலேசியா பெர்ஹாட் நிருவாக வாரியம் அதன் நற்பண்புடைய வாரிய உறுப்பினர் கா. ஆறுமுகத்திற்கு முழு ஆதரவு தெரிவிக்கிறது”, என்று அவர் அறிவித்தார்.
“போலீஸ் விசாரணை, நான் காத்துக் கொண்டிருக்கிறேன்”
தமக்கு எதிராகச் செய்யப்பட்டுள்ள போலீஸ் விசாரணை ஊடகம் வழியாக நடத்தப்படுவதாகத் தெரிகிறது. போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணை செய்யட்டும். “நான் காத்துக் கொண்டிருக்கிறேன்”, என்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஆறுமுகம் கூறினார்.
ஆறுமுகம், கூறப்பட்டுள்ள எந்த காசோலையையும் அந்த துணை அமைச்சரிடமிருந்து பெறவில்லை. வழங்கப்பட்டது மாதிரி காசோலை. அதனை எந்த வங்கியும் ஏற்றுக்கொள்ளாது என்பதை சம்பந்தப்படவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
போலீஸ் புகாரில் இருக்கும் இன்னொரு அங்கம் நிரந்தர வேலை இல்லாத தம்மிடம் எப்படி அதிக சொத்து குவிந்து கிடக்கிறது என்பது விசாரணை செய்ய வேண்டும் என்பதாகும். அதிக சொத்தாக எது உள்ளது என்று எதையும் குறிப்பிடாமல், “என்னை மக்கள் மத்தியில் பொதுச் சொத்தை களவாடும் நபர் என சித்தரிக்கும் செயலாக அதை நான் கருதுகிறேன். புலன் விசாரணைக்காக காத்திருக்கிறேன்” என்று ஆறுமுகம் மீண்டும் கூறினார்.
தமக்கு எதிராகச் செய்யப்பட்டுள்ள போலீஸ் புகார் குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க தீவிரமாகச் சிந்தித்து வருவதாக அவர் மற்றொரு கேள்விக்கு பதில் அளித்தார்.
இந்த விவகாரத்தில் தமக்கு மிகுந்த வருத்தம் அளிப்பது ஊடகச் செய்தியாகும். மலேசிய நன்பண் ஒரு முன்னணி ஊடகமாகும். அதில் தமக்கு எதிராகச் செய்யப்பட்டிருந்த பொய்யான போலீஸ் புகார் குறித்த செய்தி முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டது.
அடுத்த நாள் ஏன் மௌனம் என்ற கேள்வி அந்நாளிதழில் முதல் பக்கத்தில் மீண்டும் வெளியிடப்பட்டது. தமிழ்ப் பேரவை குறித்து எதுவும் கூறப்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டிய ஆறுமுகம், “இது என் மீதான தனிப்பட்ட தாக்குதல்” என்றார்.
இந்த நடவடிக்கைகள் தமக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை வலியுறுத்திய அவர், “நான் ஊடகச் சுதந்திரத்தை மதிப்பவன். அது அவசியமானது. எனக்கு அதில் மிகுந்த உடன்பாடு இருக்கிறது. ஆனால், அச்சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது”, என்றார்.
கா.ஆறுமுகத்திற்கு எதிராக போலீஸ் புகார் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அதில் தமிழ்ப் பேரவை மலேசியா பெஹாட்டிற்கும் ஏதோ தொடர்பு இருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுவதற்கான சாத்தியம் இருக்கிறது. தமிழ்ப் பேரவையின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு, தமிழ்ப் பேரவை வாரியம் சட்ட ஆலோசனை பெற்றுவருகிறது. தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐயங்கரன் கூறினார்.