நாஜிப் போட்ட பட்ஜெட் ஜோரானதுனு ஊரையே கலக்குதாமே!

முத்தம்மா : கோமாளி, நாஜிப் போட்ட பட்ஜெட் ஜோரானதுனு ஊரையே கலக்குதாமே! இது கேழ்வரகுல நெய் வடிகிற கதையா?

கோமாளி : கேழ்வரகில் நெய் மட்டுமல்ல முத்தம்மா, தேனும் வடியுதாம். இந்த ஆண்டு தனி நபர் வருமானம் 26,175 ரிங்கிட்டாம். இது அடுத்த ஆண்டு 28,725-க்கு உயருமாம்.

முத்தம்மா, உங்க குடும்பத்துல 5 பேர் இருந்தால் மொத்த ஆண்டு வருமானம் 143,625 ஆகும். அதாவது மாதம் ஒன்றுக்கு 11,968 ரிங்கிட்டை உங்கள் குடும்பம் பெறுவதாக கணக்கு! பிழைக்க தெரியாத இனமாக வாயையும் வயித்தையும் கட்டி வாழும் தொழிலாளர்களுக்கு இந்த கணக்கு விளங்காது.

நாடு செலவு செய்யப்போற பணம் 232,800,000,000 ஆகும். இதில் நிர்வாக செலவு மட்டும் 182,000,000,000 ஆகும். நம்மை யார் நிர்வாகம் செய்கிறார்கள் என்பது உனக்கு தெரிந்தால், கண்ட கண்ட கேள்விகளை கேட்ககூடாது. கேட்டால் நிர்வாக செலவு மேலும் கூடிடும். ஆமாம்.

அதிசயம், ஆனால் உண்மை. முதன் முதலாக பட்ஜெட் உரையில் “தமிழ்” என்ற சொல் இரண்டு இடத்தில் உள்ளது. தமிழ்ப்பள்ளிகளுக்கு 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது பையில நூறு ரிங்கிட் வெச்சிக்கிட்டு நான்கு காசை போடுற கணக்கு மாதிரிதான் முத்தம்மா!

இந்தியர்களுக்கு இன்னொரு உதவியும் உண்டு தெக்குன் என்பதில் அமனா இந்தியார் வழி 10 கோடி வழங்கப்படும். இது மொத்த ஒதுக்கீட்டான 2,100,000,00 இருந்து ஒதுக்கப்பட்ட 4.76% ஒதுகீடாகும். இதன் கணக்கு நூறு ரிங்கிட்டுல இன்னொரு நான்கு காசை இந்தியர்களுக்கு சிறுதொழில் வணிகம் செய்ய கடனாக கொடுக்கும் தீப்பமாகும்.

அம்புட்டுதான் பட்ஜெட்.