308 பக்காத்தான் நிகழ்வில் ஆயிரக்கணக்கான பேர் ‘ஆமாம்’ என்றனர்

anwar2008ம் ஆண்டு பிஎன் -னிடமிருந்து பினாங்கைப் பக்காத்தான் கைப்பற்றிய ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நேற்றிரவு எஸ்பிளனேடில் நடைபெற்ற 308 பக்காத்தான் ராக்யாட் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களில் 15,000 பேர் கலந்து கொண்டனர்.

‘அரசியல் சுனாமி’ என அழைக்கப்பட்ட அந்த 2008 தேர்தலில் பினாங்கு உட்பட ஐந்து மாநிலங்கள் பக்காத்தானிடம் விழுந்தன. நாடாளுமன்றத்தில் பிஎன் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இழந்தது.

மொத்தம் 20,000 பேர் அமரக் கூடிய அந்த தேவான் பண்டாராயா திடலில் பாதிக்கு மேல் மக்கள் கூட்டம் நிரம்பியிருந்தது.

இரவு 9 மணி வாக்கில் முதலமைச்சர் லிம் குவான் எங் அந்த திடலுக்கு வந்து சேர்ந்தார். அப்போது மக்கள் கைதட்டி அவருக்கு உற்சாகாமான வரவேற்பு அளித்தனர். 50,000 பேர் அந்த நிகழ்வில் பங்கு கொண்டுள்ளதாக அவர் டிவிட்டரில் செய்தி அனுப்பினார்.anwar1

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அந்த நிகழ்வில் கடைசியாகப் பேசினார். 2008 மார்ச் 8ம் தேதி கிடைத்த வெற்றிக்காக அவர் பினாங்கு மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

“நான் பினாங்கு மக்களுக்கும் முதலமைச்சருக்கும் வணக்கம் கூறுகிறேன். மலேசியாவுக்கு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு நீங்கள் தலைமை ஏற்றுள்ளீர்கள்,” என அந்த பெர்மாத்தாங் எம்பி சொன்னார்.

“நானும் பினாங்கு வாசி தான். நாங்கள் இனவாதத்திற்கு ‘இல்லை’ எனச் சொல்கிறோம். பினாங்கு முதலமைச்சர் என்னுடைய எஜமானர். கிளந்தானில், ஜோகூரில் அல்லது சபாவில் நான் எங்கு பேசினாலும் நான் மன்னிப்புக் கேட்பதில்லை. கௌரவமான சாதனைகளைப் படைத்துள்ள முதலமைச்சரைப் பெற்றுள்ளது குறித்து நான் பெருமைப்படுகிறேன்,” என அன்வார் சொன்ன போது பெருத்த கை தட்டல் எழுந்தது.

அந்த நிகழ்வில் லஹாட் டத்துவிலும் செம்போர்ணாவிலும் உயிரிழந்த எட்டுப் போலீஸ்காரர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பினாங்கு துணை முதலமைச்சர்களான மான்சோர் ஒஸ்மானும் பி ராமசாமியும், பினாங்கு பாஸ் ஆணையாளர் சலே மான் -னும் உரையாற்றினர்,

அதற்கு பின்னர் பேசிய முதலமைச்சர் லிம் குவான் எங் கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் பேசி கூட்டத்தினரைக் கவர்ந்தார்.

“நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் எங்களுக்கு வாக்களியுங்கள்,” என அவர் சொன்னார். ஜுன் மாதத்திற்குள் நடைபெற வேண்டிய தேர்தலில் பக்காத்தான் வெற்றி பெற்றால் புத்ராஜெயாவில் அதிகார மாற்றம் சுமூகமாக இருக்கும் என லிம் சொன்னார்.

anwar2“நாங்கள் 2008ல் பினாங்கில் வெற்றி பெற்றோம். நாங்கள் அமைதியாக ஆட்சியை எடுத்துக் கொண்டோம்,” எனக் குறிப்பிட்ட அவர், பினாங்கு மாநிலத்தை பக்காத்தான் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் என்பதற்கு ஒர் அறிகுறியாக தங்கள் வீடுகளில் பக்காத்தான் கொடிகளைப் பறக்க விடுமாறு கூட்டத்தினரைக் கேட்டுக் கொண்டார்.

அண்மைய காலங்கள் பிரச்சாரக் கூட்டங்களில் அதிகம் பயன்படுத்துகின்ற ஒரு கேள்வியையும் லிம் எழுப்பினார். ‘நீங்கள் பக்காத்தானுக்குத் தயாரா,” என அவர் கூட்டத்தினரை நோக்கி மூன்று முறை கேட்டார்.

அந்த மூன்று முறையும் கூட்டத்தினர் ‘ஆமாம்’ எனப் பதில் அளித்தனர்.

அண்மையில் பிஎன் ஏற்பாடு செய்த, பிரபல கொரியப் பாடகர்  Psy கலந்து கொண்ட சீனப் புத்தாண்டு பொது உபசரிப்பின் போது ‘பிஎன் -னுக்கு நீங்கள் தயாரா என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வினவிய போது கூட்டத்தினர் ‘இல்லை’ எனப் பதில் அளித்தனர்.

நள்ளிரவு வாக்கில் அந்த கூட்டம் அமைதியாக முடிந்தது