அன்வார்: சைபுல் தந்தை கேட்டுக் கொண்ட மன்னிப்பால் எதுவும் மாறப் போவதில்லை

anwarஎதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், சைபுல் புஹாரியின் தந்தை அஸ்லான் முகமட் லாஸிம், தாம் குதப்புணர்ச்சிக் குற்றச்சாட்டுக்களில் நிரபராதி எனக் கூறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து தாம் பழி வாங்கப்பட்டு விட்ட உணர்வைப் பெற்றுள்ளதாக கூறுகிறார்.

“தொடக்கத்திலிருந்தே நான் நிரபராதி என வலியுறுத்தி வருகிறேன். நீதி மன்றமும் நான் நிரபராதி என முடிவு  செய்து கடந்த ஆண்டு என்னை விடுதலை செய்தது,” என பினாங்கில் நேற்றிரவு பக்காத்தான் 308 ஐந்தாம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட பின்னர் அவர் நிருபர்களிடம் கூறினார்.

சைபுலுடைய தந்தை இன்னொரு விஷயத்தை வெளியிட்டுள்ளார். அது நீதிமன்றத்தில் எழுப்பப்படவே இல்லை என்றும் அந்த முன்னாள் துணைப் பிரதமர் தெரிவித்தார்.

அன்வார் மீது குதப்புணர்ச்சி குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவதூறு சொல்வதற்கு பிரதமர் துறை அதிகாரி ஒருவர் உட்பட பொறுப்பற்ற தரப்புக்கள் தமது புதல்வரைப் பயன்படுத்தியுள்ளதாக அஸ்லான் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கள் பற்றி அன்வார் கருத்துரைத்தார்.anwar1

தாமும் சைபுலும் வெளியிட்ட எல்லா ஊடக அறிக்கைகளையும் பிரதமர் துறையின் சிறப்பு அதிகாரி ஒருவரும் வழக்குரைஞரான ஸாம்ரி இட்ருஸும் தயாரித்ததாகவும் 60 வயதான அஸ்லான் ஒர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அதிர்ச்சியூட்டும் அந்தத் தகவலைத் தொடர்ந்து, எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம்,  தமது அரசியல் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு தமது தந்தை அஸ்லான் முகமட் லாஸிமைப் பயன்படுத்திக் கொண்டுள்ளதாக முகமட் சைபுல் புஹாரி அஸ்லான் கூறியுள்ளார்.

தமது தந்தையின் நடவடிக்கை குறித்து தாம் வருத்தம் அடைந்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

நேற்று தமது தந்தை தெரிவித்த விஷயங்களை மறுத்த 26 வயது சைபுல், அன்வாருக்கு எதிரான தமது குதப்புணர்ச்சி குற்றச்சாட்டை மீட்டுக் கொள்ளப் போவதில்லை என வலியுறுத்தினார்.

“நான் அந்தக் குற்றச்சாட்டிலும் நீதிமன்றத்தில் அளித்த சாட்சியத்திலும் உறுதியாக இருக்கிறேன். நான் பள்ளிவாசலிலும் சத்தியம் செய்திருக்கிறேன்.”