கடந்த பொதுத் தேர்தல் நடந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில் நஜிப் அப்துல் ரசாக் இனிமேலும் சட்டப்பூர்வப் பிரதமர் எனக் கருதப்பட முடியாது என மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான லிம் கிட் சியாங் கூறுகிறார்.
“மார்ச் 9 முக்கியமான நாள் ஏனெனில் இன்றைய தினத்திலிருந்து நமக்கு உள்ள பிரதமர் சட்டப்பூர்வமானவர் அல்ல,” என அவர் நேற்றிரவு கூறினார்.
அவர் ஷா அலாமில் சிலாங்கூர் பக்காத்தான் ராக்யாட் பேரணியில் உரையாற்றினார்.
2009ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி அப்துல் அகமட் படாவியிடமிருந்து பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நஜிப் கட்டளை ஏதும் பெறாத பிரதமரும் ஆவார் என்றும் லிம் சொன்னார்.
“மக்களிடமிருந்து கட்டளை பெறாமல் நீண்ட காலத்துக்கு ஆட்சி புரிந்த பிரதமர் என்றும் அவர் நினைவு கூறப்படுவார்,” என்றும் லிம் குறிப்பிட்டார்.
“இது புதிய சாதனையாகும் மலேசியாவில் மட்டுமின்றி கின்னஸ் சாதனையிலும் அது சேர்க்கப்பட வேண்டும்.”
“இது மலேசியர்களை கடந்த நான்கு ஆண்டுகளாக ‘தேர்தல் சிந்தனையிலும்’ வைத்துள்ளது. அதுவும் பெரும்பாலும் இன்னொரு உலக சாதனையாக இருக்கும்.”
லஹாட் டத்து-வுக்கு பழி போடும் படலம்
இதனிடையே இன்னும் நீடிக்கும் சபா ஊடுருவலைத் தாம் தூண்டி விட்டதாக கூறிக் கொண்டு தம்மை ஜெயிலில் அடைப்பதற்கு கூட்டரசு அரசாங்கம் முயலுவதாக 5,000 பேர் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் பேசிய பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.
“என்னைப் பொறுத்த வரையில் லஹாட் டத்து பிரச்னையில் என் மீது அவதூறு சொல்ல ஊடகங்கள் முயன்று வருகின்றன. ஒரு வேளை அவை என்னை அங்கு கொண்டு செல்ல முயலக் கூடும்.”
“அவர்கள் என்னை மீண்டும் மிரட்டுகின்றன. ஆனால் நான் சொல்கிறேன். நான் பின் வாங்கப் போவதில்லை,” என்றார் அன்வார்.
பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி விட்ட 2008 மார்ச் 8 தேர்தலின் ஐந்தாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் டாத்தாரான் கெமெர்தேகானில் அந்த நிகழ்வு நடத்தப்பட்டது.
சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம், பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயில், சிலாங்கூர் பாஸ் தலைவர் அப்துல் ரானி ஒஸ்மான் ஆகியோரும் அந்த நிகழ்வில் பேசினார்கள்.