பிரதமர்: கிள்ளான் பள்ளத்தாக்கில் தாங்கக் கூடிய விலையில் 80,000 வீடுகள் கட்டப்படும்

கிள்ளான் பள்ளத்தாக்கிலும் கூட்டரசுப் பிரதேசத்திலும் நடுத்தர வருமானத்தை கொண்ட மக்களுக்கு தாங்கக் கூடிய விலையில் 80,000 வீடுகள் கட்டப்படும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று அறிவித்தார்.

ஒரே மலேசியா மக்கள் வீடமைப்புத் திட்டத்தின் ( PR1MA )கீழ் கிள்ளான் பள்ளத்தாக்கில் 50,000 வீடுகள் கட்டப்படும் என்றும் எஞ்சிய வீடுகளை கூட்டரசுப் பிரதேச, நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சு கட்டும் என்றும் அவர் சொன்னார்.

“தாங்கக் கூடிய விலையில் மொத்தம் 80,000 வீடுகள் கட்டப்படும் என்பதே அதன் அர்த்தமாகும்,” என செராஸ் அலாம் டாமாயில் PR1MA திட்டத்தை தொடக்கி வைத்த நஜிப் தெரிவித்தார்.

அந்த வீடுகளின் விலைகள், மாதம் ஒன்றுக்கு 2,500 ரிங்கிட் முதல் 7,000 ரிங்கிட் வரை வருமானத்தைக் கொண்டுள்ள மக்கள் தாங்கக் கூடிய நிலையில் இருக்கும் என அவர் உறுதி அளித்தார்.

“அரசாங்கத் திட்டங்களில் வழக்கமாக விடுபட்டுப் போவதால் நடுத்தர வருமானத்தைக் கொண்டவர்களுக்கு அத்தகைய திட்டம் அவசியமாகும்.”

“ஏழ்மையில் உள்ள மக்களுக்கு மக்கள் வீடுகள் போன்ற திட்டங்களை நாங்கள் வைத்துள்ளோம். கிராமப்புறங்களில் வசிக்கின்றவர்களுக்கும் நாங்கள் திட்டங்களை வைத்துள்ளோம்,” என நஜிப் மேலும் சொன்னார்.

“ஒவ்வொரு மலேசியக் குடும்பமும் சொந்த வீட்டைப் பெற்றிருக்க விரும்புவதை அரசாங்கம் உணர்ந்துள்ளதாக கூறிய அவர், அந்த விருப்பம் நிதிப் பற்றாக்குறையால் தடைப்பட்டுள்ளது என்றார்.

“சொந்த வீடுகளை பெற்றிருப்பதற்கான விருப்பம் நடைமுறைக்கு ஏற்றது, பொருத்தமானது. உண்மையில் மக்கள் உரிமைகள் மலேசியாவில் நிறைவேற்றப்பட வேண்டும்,” என்றும் பிரதமர் சொன்னார்.

பெர்னாமா