சைபுல் புகாரி அஸ்லானின் தந்தை மாற்றரசுக்கட்சியான பிகேஆரில் சேர முடிவுசெய்து பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கட்சி செயலகத்தில் அவரின் விண்ணப்பப் பாரத்தை இன்று சமர்பித்தார்.
அன்வார் இப்ராகிம் தம்முடன் குதப்புணர்ச்சியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டியவர் சைபுல். அக்குற்றச்சாட்டு மீது வழக்கு நடந்து இவ்வாண்டு ஜனவரியில் அன்வார் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
“நான் எப்போதுமே பிகேஆரை ஆதரித்து வந்துள்ளேன். இப்போது அன்வார் இப்ராகிம் தலைமையில் உள்ள கட்சியில் சேரப்போகிறேன்”, என்று அஸ்லான் முகம்மட் லாஜிம் கூறினார். அவர் பிகேஆர் தலைமையக கட்டிடத்தில் விண்ணப்பப்பாரத்தை ஒப்படைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அஸ்லான், “பிரதமர் அலுவலகத்தில் உள்ள ஒருவர்”அன்வார்மீது அவதூறு கூற தம்மையும் தம் மகனையும் பயன்படுத்திக்கொண்டார் என இரண்டு நாள்களுக்குமுன் அறிக்கை விடுத்திருந்தார்.