சபாவுக்குள் ஆயுதங்களுடன் ஊடுருவிய தமது ஆதரவாளர்கள் சண்டையிலிருந்து ‘விலகிக் கொள்வது’ மீது பிலிப்பின்ஸ் அரசாங்கத்துடன் பேச்சு நடத்த சுலு சுல்தான் எனத் தம்மைப் பிரகடனம் செய்து கொண்டுள்ள மூன்றாவது ஜமாலுல் கிராம் தமது பேராளர்களை அனுப்பியுள்ளார்.
ஜமாலுல் கிராமின் இளைய சகோதரர் இரண்டாவது சுல்தான் பாந்திலான் எஸ்மாயில் கிராமும் உள்துறை அமைச்சர் மானுவல் ரோக்ஸாஸும் இடையில் குவேசோன் சிட்டியில் உள்ள தேசியப் போலீஸ் தலைமையகத்தில் இரண்டு மணி நேரம் சந்தித்துப் பேசியதாக மணிலாவைத் தளமாகக் கொண்ட Interaksyon செய்தி நிறுவனம் கூறியது.
சுலு சுல்தான் ஆதரவாளர்கள் சண்டையிலிருந்து விலகிக் கொள்வது பற்றியும் ஜமாலுல் கிராமின் ஆதரவாளர்கள் ஆயுதங்களை ஒப்படைத்தால் என்ன நடக்கும் என்பது பற்றியும் தாங்கள் விவாதித்ததாக ரோக்ஸாஸ் தெரிவித்தார்
“சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஆயுதங்களை ஒப்படைப்பதே ஒரே நிபந்தனை என மலேசியத் தலைவர் வெளிப்படையாக அறிவித்துள்ளது உட்பட பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. அதற்கான நடைமுறைகள் பற்றி அவர்கள் அறிய விரும்பினர்,” என ரோக்ஸாஸ் சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறினார்.
மார்ச் முதல் தேதி மலேசியப் பாதுகாப்புப் படைகளுடன் முதலாவது துப்பாக்கிச் சண்டை தொடங்கிய பின்னர் ஜமாலுல் கிராமின் ஆதரவாளர்களில் 52 பேர் கொல்லப்பட்டனர்.
சபாவில் உள்ள பிலிப்பினோ மக்களுடைய பாதுகாப்பை உறுதி செய்ய மணிலா மேற்கொண்டுள்ள முயற்சிகள் பற்றி இரண்டாவது சுல்தான் பாந்திலான் எஸ்மாயில் கிராமுக்கு விளக்கப்பட்டதாகவும் ரோக்ஸாஸ் சொன்னார்.
அந்த விவாதங்கள் குறித்து மேல் விவரங்களைத் தர மறுத்து விட்ட அவர், தாம் விரைவில் அதிபர் பெனிக்னோ அக்கினோவைச் சந்திக்கப் போவதாக மட்டும் சொன்னார்.
ஜமாலுல் கிராம் ஆதரவாளர்கள் தங்களது வரலாற்று அடிப்படையிலான பிரதேச உரிமைக் கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக லஹாட் டத்துவில் பிப்ரவரி 11ம் தேதி தரையிறங்கினர்.
ஆயுதங்களை வைத்திருந்த அவர்கள் எட்டு மலேசியப் போலீஸ்காரர்களைக் கொன்றதுடன் பலரையும் காயப்படுத்தினர். அவர்கள் ஒரு போலீஸ் அதிகாரியின் சடலத்தை சிதைத்ததாகவும் இன்னொரு அதிகாரியின் தலையை சிரச்சேதம் செய்ததாகவும் கூறப்பட்டது.
ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்கள் சிறைப்பிடிக்கப்பட வேண்டும் அல்லது அழிக்கப்பட வேண்டும் என புத்ராஜெயா சூளுரைத்துள்ளது.
ஜமாலுல் கிராம் தன் மூப்பாக சண்டை நிறுத்தத்தை அறிவித்துள்ள போதிலும் அவரது ஆட்கள் இன்னும் மலேசியப் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்துகின்றனர். பெல்டா சஹாபாட் பகுதியில் ஊடுருவல்காரர்களை வெளியேற்றுவதற்கு மலேசியப் படையினர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.