மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், தேர்தல் ஆணைய (இசி)த்துக்குக் கொடுக்கப்படும் அழுத்தத்தைத் திசைதிருப்பும் முயற்சியாகத்தான் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தேர்தல் சீரமைப்புக்காக நாடாளுமன்ற சிறப்புக்குழு அமைக்கப்படுவதாக நேற்றிரவு அறிவிப்புச் செய்தார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அக்குழு அமைக்கப்படுவதை பக்காத்தான் ரக்யாட் கொள்கையளவில் ஏற்றுக்கொள்கிறது என்றாலும் அரசாங்கம் தீய நோக்கத்துடன்தான் அப்படியொரு முடிவைச் செய்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
“எங்களுக்குத் தேவை உடனடி நடவடிக்கை. இசிக்குத் தண்டனை அளிக்காமல் தவிர்க்கப் பார்ப்பது ஏன்? மோசடிச் செயலுக்கு மன்னிப்பா?”, என்று காட்டமாக உரைத்தார் அன்வார்.
“அரசாங்கம் தேர்தலில் தில்லுமுள்ளு செய்கிறது என்ற ஐயப்பாட்டைப் போக்க” தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றி விவாதிக்க நாடாளுமன்றக் குழு ஒன்று அமைக்கப்படுவதாக நஜிப் நேற்றிரவு அறிவித்தார்.
அந்த அறிவிப்பு, தேர்தல் நடைமுறைகளில் குறைபாடுகள் உண்டு என்று பக்காத்தானும் பெர்சே 2.0-உம் இதுவரை சொல்லிவந்தது உண்மைதான் என்பதை ஏற்றுக்கொள்வதற்கு ஒப்பாகும் என்று அன்வார் குறிப்பிட்டார்.
இப்போது செய்யப்பட வேண்டியது என்னவென்றால், இசி ஒரு சுயேச்சை அமைப்பாக செயல்பட அரசாங்கம் இடமளிக்க வேண்டும். அப்போதுதான் அந்த ஆணையத்தால் அதன் பொறுப்புகளை உருப்படியாக நிறைவேற்ற முடியும் என்றாரவர்.
“நமது நாடாளுமன்ற முறைக்குக்கூட சீர்திருத்தம் தேவைதான். இருந்தபோதிலும் இசியை உடனடியாக செயல்பட வைத்து அரசாங்கம் அதன் நல்லெண்ணத்தைக் காண்பிக்க வேண்டும்.
“இசி, வாக்காளர் பட்டியலைச் சரிசெய்ய முடியாமல், அஞ்சல்வழி வாக்குகளில் சீர்திருத்தம் செய்ய முடியாமல், வெளிநாட்டில் உள்ள மலேசியர்களை வாக்காளர்களாக பதிவு செய்ய முடியாமல் தடுப்பது எது? வெளிநாட்டவர், வாக்காளர் ஆவதைத் அதனால் தடுக்க முடியாமல் இருப்பது ஏன்? இசி அம்னோவின் கட்டுப்பாடின்றி சுதந்திரமாக செயல்படுவதாக இந்நாட்டில் உள்ள எவரும் எண்ண மாட்டார்கள்.”
நஜிப் இதை இழுத்துக்கொண்டே போவார்
நாடாளுமன்றக் குழு அதன் முடிவைச் செயல்படுத்துவதுதான் பிரச்னையாக இருக்கும் ஏனென்றால் அரசாங்கம் நாடாளுமன்றத்தின் பங்கை முக்கியமானதாகக் கருதுவதே இல்லை என்று அன்வார் கூறினார்.
சிறப்புக்குழு அமைக்கப்பட வேண்டுமானால் நாடாளுமன்ற அவசரக்கூட்டம் நடத்தப்பட வேண்டும் ஆனால் அது நடத்தப்படும் என்பதற்கான குறிப்பு எதனையும் நஜிப் காண்பிக்கவில்லை. இதனால் தேர்தல் சீர்திருத்தத்தில் பிரதமரும் அவரது நிர்வாகமும் எவ்வளவுக்குக் கடப்பாடு கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.
“இங்கிலாந்தைப் பாருங்கள். அங்கு கலகம் மூண்டதும் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது….ஆனால், இங்கு நாடாளுமன்றம் அரசாங்கத்தின் ரப்பர் முத்திரைபோல் ஆக்கப்பட்டிருக்கிறது.
“நஜிப்பின் பேச்சில் இசி உடனடி நடவடிக்கையில் இறங்கும் என்று குறிப்பிடப்படவே இல்லை. அவர், குழு அளவிலேயே நடவடிக்கையைத் தாமதப்படுத்தி விடுவார்”, என்று அன்வார் குறிப்பிட்டார்.