இரத்தக்குழாய் அடைப்பால் பரப்புரை செய்வதிலிருந்து ஒதுங்கி இருப்பார் பாலா

1bala

முன்னாள் தனியார் துப்பறிவாளரான பி.பாலசுப்ரமணியத்துக்கு இருதய இரத்தக்குழாய்களில் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர் பக்காத்தான் ரக்யாட்டின் தேர்தல் பரப்புரைகளில் தொடர்ந்து பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

மார்ச் முதல் நாள், கோத்தா பாருவில் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது முதன்முதலாக அவருக்கு நெஞ்சில் வலி ஏற்பட்டது.  அதைத் தொடர்ந்து அவர் சிலாங்கூரில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார்.

1bala1அங்கு வலிக்குறைப்பு ஊசி போடப்பட்டதை அடுத்து நன்றாக இருந்தது.  கிளந்தானுக்குத் திரும்பிச் சென்றார்.  அங்கிருந்து திரும்பி வரும் வழியில் நெஞ்சு மறுபடியும் வலித்ததாக பாலா மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

அதைப் பொருட்படுத்தாமல், சிலாங்கூர், டமன்சாராவில் ஒரு நிகழ்வில் பேசச் சென்றார். அன்றிரவு வலி மோசமடைந்தது.

“மிகவும் களைத்துப் போய் உறங்கினேன். காலை 5 மணி இருக்கும், மூச்சுவிட சிரமமாக இருந்தது. எழுந்து உட்கார்ந்தால் மூச்சுவிட முடிந்தது.  படுத்தால் (மூச்சுவிட) முடியவில்லை”, என்று விவரித்தார்.  பரிசோதனைக்காக மருத்துவமனை செல்ல முடிவுசெய்தார்.

1bala2கடந்த மாதம் சென்னையிலிருந்து திரும்பி வந்ததிலிருந்து பாலா பக்காத்தானுக்காக பரப்புரை செய்வதில் முழுமூச்சாக ஈடுபட்டிருக்கிறார்.

மங்கோலிய பெண்ணான அல்டான்துன்யா கொலையுடன் பிரதமர் நஜிப்புக்கும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதை விளக்குவதை அவர் முக்கிய பணியாகக் கொண்டிருக்கிறார்.

ஆனால் நஜிப்,  அதில் தமக்குச் சம்பந்தமுண்டு என்று கூறப்படுவதை வன்மையாக மறுத்துள்ளார்.

அல்டான்துன்யா கொலை தொடர்பில் முன்னுக்குபின் முரணான இரண்டு சத்திய பிரமாணங்கள் செய்ததன் மூலமாக பிரபலமானவர் பாலா.  ஆனால், அதன்பின் அவர் தம் பாதுகாப்பை எண்ணி அஞ்சினார்.  அதனால் நாட்டைவிட்டுத் தப்பி ஓடினார். அவருடன் அவரின் குடும்பத்தாரும் சென்றனர்.

இப்போது அவர்கள் அவரைப் பார்ப்பதற்காக திரும்பி வந்திருக்கிறார்கள்.

1balaமருத்துவ மனையில், முகத்தில் இலேசான முடி முளைத்து ஒழுங்குபடுத்தப்படாமல் இருந்த நிலையில் காணப்பட்டாலும்,  பாலாவின் உற்சாகம் குறையவில்லை.

“மருத்துவர், இருதயத்தின் ஒரு பகுதியில் துடிப்பில்லை என்று கூறினால், எப்படி இருக்கும்?”. பேச்சில் வேதனை இருந்தாலும் முகத்தில் புன்னகையை வைத்துக்கொண்டிருந்தார்.

இயன்றவரை பக்காத்தானுக்க்காக தேர்தல் பரப்புரை செய்வதென உறுதியுடன் இருக்கிறார்.

“இது என்னைப் பரப்புரை செய்வதிலிருந்து தடுத்து விடாது. நிச்சயம் திரும்பி வருவேன்….. இது சின்ன விசயம்”, என்றார்.

ஆனாலும் உடல்நிலை மோசமடைந்தால் அது முடியாமல் போய்விடும் என்பதையும் அவர் அறிந்தே உள்ளார்.

மார்ச் 6-இல் ஜோகூர் பாருவுக்கும், மார்ச் 9-இல் சாபாவுக்கும் அவர் சென்றிருக்க வேண்டும். ஆனால், இரண்டுக்குமே செல்ல முடியவில்லை.

திரும்பி வந்தது நல்லதாக போயிற்று 

இன்று மருத்துவ மனையிலிருந்து வெளியேறும் பாலா, இரத்தக்குழாய் அடைப்பைக் குறைக்க மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்வார். ஒரு வாரம் கழித்து மறுபடியும் மருத்துவ மனைக்குப் பரிசோதனைக்குச் செல்வார்.

அப்போது அவருக்கு இரத்தக்குழாயில் ஸ்டெண்ட் பொருத்துவதா அல்லது bypass அறுவை சிகிச்சை தேவையா என்பதை மருத்துவர் தீர்மானிப்பார்.

ஸ்டெண்ட் பொருத்துவது போதுமென்றால், அவரால் தொடர்ந்து பரப்புரைகளில் ஈடுபட முடியும்.

bypass அறுவை சிகிச்சை செய்தால் அவர் அதனின்றும் குணமடைய நீண்ட நாளாகும்.  தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட முடியாமல் போகும்.

1bala 4நாடு திரும்பிய பாலா, முதன்முதலாக பிப்ரவரி 28-இல் கோலாலும்பூர். சிலாங்கூர் அசெம்பிளி மண்டபத்தில் பொதுமக்களைச் சந்திக்கும் நிகழ்வில் கலந்துகொண்டார். அன்றிலிருந்து பொதுமக்களைச் சந்தித்துப் பேசுவதில் ஆர்வம் காண்பிக்கிறார்.

பக்காத்தானுக்கு முன்பிருந்ததைவிட இப்போது ஆதரவு பெருகியிருப்பதாகவும் அது பக்காத்தானை வெற்றிக்கு இட்டுச் செல்லும் என்றும் அவர் நம்புகிறார்.

தாம் நாடு திரும்பி வந்ததும் நல்லதாகப் போயிற்று என்றார்.

“பரப்புரை செய்வதற்காக திரும்பி வராமல் இருந்திருந்தால், இது (இருதய நிலை) தெரியாமலேயே போயிருக்கும். இந்தியாவிலேயே இருந்திருப்பேன். அமைதியாக இறந்தும் போயிருக்கலாம்”, என்றார்.

 

நாளை: ‘ நான் அதற்குள்  செத்துப்போவதை  அல்டான்துன்யா  விரும்பவில்லை’