கம்பார் மாவட்ட போலீஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் இருந்த போது மரணமடைந்த எம் ரகு-வின் சடலத்தை தாங்கள் சோதனை செய்யவும் தங்கள் கண்டுபிடிப்புக்களை கேமிராவில் பதிவு செய்யவும் அனுமதிக்கப்படாததால் ஏதோ தவறு நிகழ்வதாக அவரது குடும்பத்தினர் கருதுகின்றனர்.
சடலத்தை சோதனை செய்வதற்கு கம்பார் மருத்துவமனை சவக் கிடங்கிற்கு தாம் சென்ற போது தமது கைத்தொலைபேசியை சட்டைப் பைக்குள் வைத்திருக்குமாறு போலீசார் தமக்கு ஆணையிட்டதாக ரகுவின் உறவினரான எம் விக்னேஸ் கூறினார்.
“என் மாமாவின் மரணத்தில் சந்தேகம் ஏதும் இல்லை என்றால் அவர்கள் ஏன் என் மாமாவை படம் பிடிப்பதற்கு என் கைத்தொலைபேசியைப் பயன்படுத்துவதை தடுக்கின்றனர் ?” எனத் தொடர்பு கொள்ளப்பட்ட போது விக்னேஸ் சொன்னார்.
முழுமையாக வெள்ளைத் துணியால் மூடப்பட்டு முகம் மட்டுமே தெரிந்த சடலத்தை மேலோட்டமாக பார்ப்பதற்கு மட்டுமே தாம் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
முகத்தில் எந்தக் காயமும் தெரியவில்லை என்றும் உடம்பின் மற்ற பகுதிகளில் காயம் ஏதும் உள்ளதா என்பதை தம்மால் சோதிக்க முடியவில்லை என்றும் விக்னேஸ் கூறினார்.
போலீஸ்: படங்களை எங்களிடமிருந்து வாங்கிக் கொள்ளுங்கள்
“ஆதாரத்திற்கு இடையூறு ஏற்படக் கூடும்” என்பதால் குடும்பத்தினர் சடலத்தை தொடக் கூடாது என கம்பார் மாவட்ட போலீஸ் தலைவர் இங் கொங் சூன் தொடர்பு கொள்ளப்பட்ட போது கூறினார்.
தடயவியல் குழு மட்டுமே சடலத்தை சோதிப்பதற்கு அனுமதிக்கப்படும் என அவர் சொன்னார்.
படம் பிடிக்க விக்னேஸ் அனுமதிக்கப்படாதது பற்றிக் குறிப்பிட்ட இங், அது வழக்கமான நடைமுறை என்றார்.
“படம் பிடிப்பதற்கு குடும்பத்தினர் அனுமதிக்கப்படுவது இல்லை. போலீசாரிடம் நிபுணத்துவ படப்பிடிப்பாளர்கள் உள்ளனர். அது எளிதான வேலை அல்ல.”
“படங்கள் சமர்பிக்கப்படும் போது எப்போது, எங்கு, எந்த கேமிரா பயன்படுத்தப்பட்டது என நீதிமன்றம் விசாரிக்கும்,” என இங் மலேசியாகினியிடம் கூறினார்.
என்றாலும் போலீஸ் படங்களை வாங்கிக் கொள்வதற்கு கடிதம் எழுதுமாறு இங், ரகு குடும்பத்துக்கு ஆலோசனை கூறினார்.
போலீஸ் தலைவர்: தவறு ஏதும் நிகழவில்லை
மன நோயாளியான ரகு மார்ச் 6ம் தேதி கடைக்காரர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவரையும் தாக்கியிருக்கிறார்.
பின்னர் அவர் போலீசாரிடம் சரணடைந்தார். இரண்டு நாட்களுக்குப் பின்னர் அவருக்கு எட்டு மாதச் சிறைத் தண்டணையும் ஈராயிரம் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.
சிறைச்சாலைக்கு மாற்றப்படுவதற்கு முன்னதாக ஞாயிற்றுக் கிழமை காலையில் கம்பார் போலீஸ் மாவட்டத் தலைமையகத்தில் உள்ள லாக்கப்பில் ரகு இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
ரகு “pulmonary embolism”காரணமாக மரணமடைந்தார் என பேராக் மாநில போலீஸ் துணைத் தலைவர் ஏ பரமசிவம் கூறியதாக தி ஸ்டார் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
“பரமசிவம் அதனை ‘திடீர் மரணம்’ என வகைப்படுத்தினார். வெளிக்காயங்களோ அதிர்ச்சியோ ஏதுமில்லை என்றும் அவர் சொன்னார்.
உள்ளூர் மருத்துவமனைகளுடைய சுதந்திரம் கேள்விக்குரியதாக இருப்பதால் இரண்டாவது சவப் பரிசோதனை, தேவைப்பட்டால் வெளிநாட்டில் நடத்தப்பட வேண்டும் என்று ரகு குடும்பத்தைப் பிரதிநிதிக்கும் வழக்குரைஞர் பி உதயகுமார் கூறினார்.