கடந்த வாரம் பாதுகாப்புப் படைகள் கொன்ற சுலு ‘ஜெனரல்’ மோரோ தேசிய விடுதலை முன்னணியின் (MNLF) முன்னாள் தளபதி ஹாஜி மூசா என்பதை சபா போலீஸ் தலைவர் ஹம்சா தாயிப் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
“தஞ்சோங் பத்துவில் பாதுகாப்புப் படைகள் ஹாஜி மூசா எனப் பெயருடைய ‘ஜெனரல்’ ஒருவரை சுட்டுக் கொன்றதை உறுதிப்படுத்த நான் விரும்புகிறேன்,” என ஹம்சா, இன்று லஹாட் டத்து பெல்டா சஹாபாட் கடலோர ஒய்வுத் தலத்தில் நிருபர்களிடம் கூறினார்.
கடந்த வியாழக்கிழமை தஞ்சோங் பத்துவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்களின் ‘ஜெனரல்’ எனக் கருதப்பட்ட அவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘சுலு சுல்தான் இராணுவம்’ என அழைக்கப்பட்ட ஒர் அமைப்பின் 22 உறுப்பினர்களது சடலங்களை மலேசியப் பாதுகாப்புப் படைகள் நேற்று வரை கண்டு பிடித்துள்ளன.
சவப்பரிசோதனைக்காக மூசாவின் சடலம் லஹாட் டத்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.