பிகேஆர், போலீஸ் இரட்டை நியாயத்தைக் கடைப்பிடிப்பதாகக் குறைகூறியுள்ளது. நேற்று, அதன் தலைமையகத்துக்குமுன் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் முட்டைகள், குச்சிகள் முதலிவற்றை வீசி எறிந்ததை போலீசார் வேடிக்கை பார்த்தனரே தவிர நடவடிக்கை எடுக்கவில்லை என்றது கூறியது.
அப்படிச் செய்தவர்களில் சிலர் அம்னோ, பிஎன் உறுப்பினர்கள் என்று பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி (இடம்) இன்று கூறினார்.
“ட்ரோபிகானா போலீஸ் நிலையம் பிகேஆர் தலைமையகத்துக்குப் பக்கத்தில்தான் உள்ளது…….ஆனால், போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை…..நடந்ததை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
“ஆர்ப்பாட்டக்காரர்கள் பிகேஆர் தலைமையகத்தைக் கொளுத்தப்போவதாகக்கூட மருட்டினார்கள். அது குற்றமில்லையா. போலீசார் அவர்கள்மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். போலீசார் இரட்டை நியாயத்தைக் கடைப்பிடிக்கக் கூடாது”, என்று ரபிஸி கூறினார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் இருவரின் பெயர்களையும் அவர் குறிப்பிட்டார். அவர்களில் ஒருவர் முகம்மட் அஸ்ரி சைட் மாஸ். இன்னொருவர் வான் இந்த்ரா புத்ரா அஹமட். இருவரும் பிஎன் சட்டைகள் அணிந்திருக்கும் படங்களையும் அவர் காண்பித்தார்.