‘அரச சூலு இராணுவம்’ எனச் சுயமாக பிரகடனம் செய்துகொண்டிருக்கும் ஆயுதக் கும்பலின் தலைவர் அஸ்ஸிமுடி கிராம், லாஹாட் டத்துவில் பெல்டா சஹாபாட்டைச் சுற்றிலும் மலேசிய பாதுகாப்புப் படைகள் ‘துடைத்தொழிப்பு’ நடவடிக்கை மேற்கொண்டுள்ள பகுதியில்தான் இருப்பார் என நம்பப்படுகிறது.
சூலு ‘சுல்தான்’ மூன்றாம் ஜமாலுல் கிராமின் தம்பியான அஸ்ஸிமுடி நடவடிக்கை பகுதிக்குள்தான் எங்கோ பதுங்கி இருக்க வேண்டும் என சாபா போலீஸ் கமிஷனர் ஹம்சா தயிப் கூறினார்.
“ஊடுருவலின் தலைவரான அவர் ஓடிப் போயிருக்க மாட்டார் என்று நம்புகிறோம். அவர் தம் ஆதரவாளர்களை விட்டுப் பிரிய மாட்டார். அவர்களைத் தனியே விடமாட்டார். அவர் இருந்துதான் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்”. ஹம்சா, இன்று காலை ஒப்ஸ் டவுலாட் பற்றித் தகவலளிக்கும் செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.
ஒப்ஸ் டவுலாட் மேற்கொள்ளப்பட்டு ஒன்பது நாள் ஆகிவிட்டதென்று குறிப்பிட்ட அவர் பாதுகாப்புப் படைகள் கடலோரப் பகுதிகளைக் கண்ணும் கருத்துமாகக் கண்காணித்து வருவதாகக் கூறினார்.
கம்போங் தண்டுவோ பகுதியைச் சுற்றிலும் நடவடிக்கை முடிந்துவிட்டாலும் அங்கு குடியிருப்போர் உடனடியாக வீடு திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்களின் குடியுரிமை, நில உரிமை முதலியவை சரிபார்க்கப்பட்டு அதன்பின்னரே அனுமதிக்கப்படுவர்.
துணைப் பிரதமர் முகைதின் யாசின், சாபா முதலமைச்சர் மூசா அமான், அப்பகுதியில் உள்ள கிராமத் தலைவர்கள் ஆகியோருக்கிடையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அவ்வாறு முடிவு செய்யப்பட்டதாக ஹம்சா கூறினார்.
பிப்ரவரி 12-இல், ஆயுதமேந்திய கும்பல் லாஹாட் டத்துவுக்கு அருகில் கம்போங் தண்டுவோவில் ஊடுருவல் செய்தததிலிருந்து அவர்களுடன் நடந்த மோதல்களில் பாதுகாப்புப் படையினரில் ஒன்பது பேர் பலியாகியுள்ளனர். ஊடுருவல்காரர்களில்- முன்னாள் மோரா தெசிய விடுதலை முன்னணியின் முன்னாள் தளபதி ஹாஜி மூசா உள்பட- 56 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஆனால், அவர்களில் 25 பேரின் சடலங்கள் மட்டுமே பாதுகாப்புப் படையினரால் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்புப் படைகள் இப்போது சுங்கை ஞாமோக், தஞ்சோங் பத்து ஆகிய இடங்களில் “துடைத்தொழிப்பு” நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகக் கூறிய ஹம்சா அங்கு மேலும் சடலங்கள் கிடைக்கலாம் என்றார்.