மூசா ஹீத்தாம்: பக்காத்தான் அரசாங்கம் நாட்டை நொடித்துப் போகச் செய்யாது

musa13வது பொதுத் தேர்தலில் கூட்டரசு அரசாங்கத்தை பக்காத்தான் ராக்யாட் எடுத்துக் கொண்டால் நாடு நொடித்துப் போகும் எனக் கருதுவது நியாயமாகாது என முன்னாள் துணைப் பிரதமர் மூசா ஹீத்தாம் கூறுகிறார்.

அதற்குப் பதில் அடுத்து வரும் பொதுத் தேர்தலில் தான் மீண்டும் தெரிவு செய்யப்பட வேண்டும் என அது விரும்பும் என்பதால் தேசியப் பொருளாதார வேகத்தை விரைவுபடுத்த எதிர்த்தரப்புக் கூட்டணி தன்னால் முடிந்ததைச் செய்யும் என அவர் விளக்கினார்.

“நாட்டு திவாலாகும் என்பது ஒர் அரசியல் அறிக்கை ஆகும். என் கருத்துப்படி அது தவறு. உண்மையில் அந்த விஷயம் குறித்து பொருளகங்கள், அந்நியர்கள் உட்பட நானும் கருத்துக்களை தெரிவித்துள்ளோம்.”

“இதுவே என் சொந்தக் கருத்தும் நிலையுமாகும்,” என மூசா மலாய் நாளேடான சினார் ஹரியான் ஏற்பாடு செய்த ஒரு நாள் ஆய்வரங்கில் கலந்து கொண்ட பின்னர் நிருபர்களிடம் கூறினார்.

பக்காத்தான் அடுத்தடுத்து வரும் தேர்தல்களிலும் புதிய கட்டளையை பெற வேண்டும் என விரும்புவதால் அது அந்நிய முதலீட்டாளர்களை விரட்டாது, நாட்டையும் நொடித்துப் போகச் செய்யாது என அவர் சொன்னதாகவும் அந்த மலாய் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

“அது தான் அவற்றின் நம்பிக்கை. அதற்காகத் தான் அவை தேர்தலில் போட்டியிடுகின்றன. மக்களுக்கு தான் சிறந்த சேவையாற்ற முடியும் என அவை சொல்கின்றன.”

“நீங்கள் ஜனநாயகக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டால் மற்ற கட்சிகள் நாட்டை நொடித்துப் போகச் செய்யும் என நீங்கள் சொல்ல மாட்டீர்கள்,” என மூசா ஹீத்தாம் மேலும் கூறினார்.musa2

‘திவாலான அரசியல்வாதிகளே இனவாதப் பிரச்னைகளைப் பயன்படுத்துவர்’

அவர் 1981ம் ஆண்டு தொடக்கம் 1986ம் ஆண்டு வரையில் நாட்டின் துணைப் பிரதமராக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டின் கீழ் பணியாற்றியுள்ளார்.

தேர்தலின் போது பிரச்சாரத்திற்கு இன்னும் இனப் பிரச்னைகளைப் பயன்படுத்தும் அரசியல்வாதிகள் உண்மையில் ‘திவாலான அரசியல்வாதிகள்’ என அவர் வருணித்தார்.

கடந்த காலத்தில் ஒர் இனம் மட்டும் ஆதிக்கம் செலுத்திய பகுதிகளில் இனப் பிரச்னைகளை அரசியல் கட்சிகள் பயன்படுத்த முடிந்தது. ஆனால் நடப்பு சூழ்நிலையில் இனிமேல் அவ்வாறு செய்ய முடியாது என மூசா ஹீத்தாம் சொன்னார்.

“இப்போது முடியாது. ஏனெனில் அரசாங்கம் பல வகையான சாதனைகளை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கம் வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை.”

“அரசாங்கம் தனது சாதனைகளில் பெருமை கொள்ள வேண்டும். ஆட்சேபங்களும் குறை கூறல்களுக்கும் நிச்சயம் இருக்கும். அவை அரசியலில் சகஜமானவை.”

அரசியல்வாதிகள் தங்கள் ஆற்றலை ஆதாரத்துடன் மெய்பிக்க விவாதங்களில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.