பாஸ்: முட்டைகளை நாங்கள் வீசவில்லை, எங்கள் மீது எறியப்பட்டன

கடந்த திங்கிட்கிழமையன்று நெகிரி செம்பிலான் ஜெலுபு பாஸ் தொகுதி உறுப்பினர்கள் பெல்கிரா ஆயர் ஹித்தாமில் நிகழ்ந்த பிஎன் செராமா ஒன்றில் சொற்பொழிவாளர் மீது முட்டைகளை எறிந்ததாக வெளியான செய்திகளை அந்தத் தொகுதி மறுத்துள்ளது.

உத்துசான் மலேசியாவில் வெளியான அந்தச் செய்தியை மறுத்த ஜெலுபு பாஸ் துணைத் தலைவர் நோர் ஹனிப் செலாமாட், உண்மையில் இரவு மணி 9.40 வாக்கில் நிகழ்ந்த அந்த சம்பவத்தில் தமது தொகுதி உறுப்பினர்களே பட்டாசுகள், போத்தல்கள், முட்டைகள் ஆகியவற்றைக் கொண்டு தாக்கப்பட்டதாகச் சொன்னார்.

அந்தத் தாக்குதலின் விளைவாக அருகில் நிகழ்ந்து கொண்டிருந்த பக்காத்தான் ராக்யாட் செராமா ஒன்றில் கலந்து கொண்டிருந்த மூவர் காயமடைந்தனர். அவர்கள் மீது பிஎன் ஆதரவாளர்கள் வீசிய பல போத்தல்கள் விழுந்ததாக அவர் சொன்னார்.

“நாங்கள் திருப்பித் தாக்கவில்லை. ஜெலுபு தலைவர் பேசிக் கொண்டிருந்த போது நிலைமை பதற்றமாக இருந்தது. அதற்குப் பின்னர் செராமாவை தள்ளி வைக்குமாறு போலீசார் எங்களைக் கேட்டுக் கொண்டனர்.”

“அவர்கள் பட்டாசுகளையும் போத்தல்களையும் கற்களையும் முட்டைகளையும் வீசினர். எங்கள் மீது இரண்டு விதமான முட்டைகள்- நல்ல முட்டைகளும் கெட்டுப் போன முட்டைகளும் வீசப்பட்டன.”

“எங்கள் செராமா நிகழ்ந்த இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் அவர்கள் இருந்ததால் சில முட்டைகள் எங்களை தாக்கவில்லை என்பதே ஒரே ஒரு விஷயம்,”என மலேசியாகினி தொடர்பு கொண்ட போது நோர் ஹனிப் தெரிவித்தார்.