‘லஹாட் டத்துவில் வேவுத் துறை முழுத் தோல்வி’

ghafirசபா லஹாட் டத்துவில் ‘அரச சுலு இராணுவம்’ மேற்கொண்ட ஊடுருவலைக் கண்டு பிடிப்பதில் ‘வேவுத் துறை மொத்தமாகவும் முழுமையாகவும் தோல்வி கண்டுள்ளது’. இராணுவத்தின் வேவுத் துறை தனது வலிமையை இழந்து விட்டதே அதற்குக் காரணமாகும்.

அந்தக் குற்றச்சாட்டை ஒய்வு பெற்ற இராணுவத் தலைமைத் தளபதி  லெப்டினட் ஜெனரல் அப்துல் காபிர் அப்துல் ஹமிட் இன்று சுமத்தினார்.

இராணுவ வேவுத் துறை அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்பட்டதே அது தனது வலிமையை இழந்தற்குக் காரணம் என்றார் அவர்.

“ஈராயிரத்தாவது ஆண்டு தொடக்கம் தற்காப்பு ஊழியர் வேவுத் துறையும் அந்நிய வேவுத் தகவல்களைத் திரட்டுவதற்கு அதற்கு உள்ள ஆற்றலும் அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டன,” என அவர் பெட்டாலிங் ஜெயாவில் நிருபர்களிடம் கூறினார்.

“அவை மருட்டல்கள் பற்றிய வேவுத் தகவல்களைப் பெறுவதற்கான தங்கள் நிபுணத்துவத்தையும் வளப்பத்தையும் இழந்து விட்டன.”

“நமது வேவுத் துறை தோல்வி அடைந்த போது அவர்கள் எளிதாக நமது கடல் எல்லைகளை மீறினர். ஊடுருவினர்.”

ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்கள்” என்ற முத்திரை தவறானதுghafir1

வேவுத் துறை தோல்வி அடையும் போது தகவல்களை அரசாங்கம் நிர்வாகம் செய்வதும் தவறாகி விடும் என்றார் அவர்.

அந்தத் துப்பாக்கிக்காரர்களுக்கு “ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்கள்” என முத்திரை குத்துவது தவறு என்றும் அப்துல் காபிர் சொன்னார்.

ஏனெனில் அத்தகைய முத்திரை குத்தும் போது அனைத்துலக ஒப்பந்தங்களினால் அரசாங்கத்தின் கரங்கள் கட்டப்படு விடும்- ‘ஊடுருவல்’ என்பது கடுமையானது அல்ல எனப் பொருள்படும். அதனால் போலீஸ் படையை மட்டுமே அனுப்ப முடியும்.

சுலு துப்பாக்கிக்காரர்களை “ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பாளர்கள்” என்ற சொல்லே சரியான சொல் என அப்துல் காபிர் நம்புகிறார்.

அப்போது இராணுவத்தை அனுப்புவது உட்பட நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க தான் செய்ய வேண்டியதை மலேசியா சுதந்திரமாகச் செய்ய முடியும்.

“நமது நிலத்தை எடுத்துக் கொண்டு நமது குடிமக்களுக்கு தீங்கு செய்ய விரும்பிய ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பாளர்களே அவர்கள்,” என்றார் அவர்.

அரசாங்கம் தொடக்கக் கட்டத்தில் அந்தப் பூசலை உறுதியான போக்கைக் கடைப்பிடித்துத் தீர்க்கத் தவறி விட்டது என்றும் அப்துல் காபிர் குற்றம் சாட்டினார்.

அந்த ஊடுருவல்காரர்களை எத்தகைய நடவடிக்கையும் இல்லாமல் 23 நாட்களுக்கு இருக்க அனுமதித்ததால் அவர்கள் தங்கள் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டனர். தற்காப்பு அரண்களையும் அமைத்துக் கொண்டனர் என்றார் அவர்.

“அதனால் நமது வேலைகள் சிரமமாகின,” என அவர் கூறிக் கொண்டார்.

தற்காப்புத் துறைக்கு தேசிய வரவு செலவுத் திட்டத்தில் கணிசமான தொகை ஒதுக்கப்பட்டதை பார்க்கும் போது ஆயுதப் படை முகாம்களில் உள்ள சாதனங்களும் வசதிகளும் தரமாக இல்லை என கடந்த ஜனவரி மாதம் அப்துல் காபிர் கூறியிருந்தார்.