ஹிம்புனான் ஹிஜாவிலிருந்து விலகிக் கொள்ளுங்கள் என வோங் தாக்-கிற்கு வேண்டுகோள்

wongபெந்தோங் தொகுதியில் டிஏபி சார்பில் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஹிம்புனான் ஹிஜாவ் தலைவர் வோங் தாக், ஹிம்புனான் ஹிஜாவ் அமைப்பிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என அதன் செயற்குழு உறுப்பினரான கிளிமெண்ட் சின் கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்த அரசு சாரா அமைப்பு எந்த ஒரு அரசியல் சித்தாந்தத்திற்கும் கட்டுப்பட்டதாக இருக்கக் கூடாது என்பதை தெளிவுபடுத்த வோங் தாக் பதவி விலக வேண்டும் என சின் ஒர் அறிக்கையில் கூறியுள்ளார்.

“பூமி சாசனத்தில் நம்பிக்கை கொண்டுள்ள அரசியல் சார்பற்ற ஆதரவாளர்கள் உட்பட அரசியல் களத்தில் இரு புறமும் உள்ள அனைவரும் ஒன்று சேரும் போது ஹிம்புனான் ஹிஜாவ் மிகவும் வலுவாகத் திகழும். அதே வேளையில் குடிமக்களும் ஹிம்புனான் ஹிஜாவ் இலட்சியத்துக்கு முழு ஆதரவு வழங்குவர்.”

“என்றாலும் நமது பொதுவான சுற்றுச்சூழல் நோக்கங்களை அடைவதற்கு ஹிம்புனான் ஹிஜாவ் எல்லா அரசியல் கட்சிகளுடனும் மற்ற அரசு சாரா அமைப்புக்களுடனும் இணைந்து செயல்பட முடியும்.”

“கொள்கை அடிப்படையில் வோங் தாக் தமது அரசியல் வாழ்க்கையைத் தொடருவதற்கு உதவியாக ஹிம்புனான் ஹிஜாவ் தலைவர் பதவியிலிருந்து விலகிக் கொள்வது நல்லது என நான் யோசனை கூறுகிறேன்,” என்றும் சின் குறிப்பிட்டார்.wong1

“பின்னர் ஹிம்புனான் ஹிஜாவ் தொடர்ந்து அரசியலை மய்யமாகக் கொண்ட அரசு சாரா அமைப்பாக  இல்லாமல் மக்களை மய்யமாகக் கொண்ட அமைப்பாகத் திகழும் பொருட்டு நடப்பு செயற்குழு புதிய தலைவரைத் தெரிவு செய்யலாம்.”

காராக்கைச் சேர்ந்த வோங் தாக், பெந்தோங் நாடாளுமன்றத் தொகுதியில் டிஏபி சார்பில் வரும் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக நேற்று அறிவித்தார். தற்போது அந்தத் தொகுதி சுகாதார அமைச்சர் லியாவ் தியோங்  லாய் வசம் உள்ளது.