தண்டா புத்ரா திரையிடப்படுவதை நிறுத்துங்கள் எனப் பிரதமருக்கு வேண்டுகோள்

razak1சர்ச்சைக்குரிய ‘தண்டா புத்ரா’ திரைப்படம் ‘ரகசியமாக திரையிடப்படுவதற்கு’ பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பெர்சே வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிரதமர் ஏதும் சொல்லாமல் இருப்பதால் 1969ம் ஆண்டு மே 13ல் நிகழ்ந்த இனக்கலவரங்களை சித்தரிக்கும் அந்தத் திரைப்படம் தனிப்பட்ட முறையில் காட்டப்படுவதற்கு அனுமதிப்பதாகத் தோன்றுகிறது என பெர்சே வழிகாட்டல் குழு உறுப்பினர் மரியா சின் அப்துல்லா கூறினார்.

“அந்தப் படம் திரையிடப்படுவதௌ அவர் நிறுத்துவார் என நான் உண்மையில் நம்புகிறேன்.”

“அவசியம் ஏற்பட்டால் அந்தத் திரைப்படத்தை எல்லா மலேசியர்களுக்கும் போட்டுக் காட்டுங்கள். அப்போது பொது மக்கள் தீர்ப்புக் கூற முடியும்,” என அவர் நேற்று மலேசியாகினி தொடர்பு கொண்ட போது கூறினார்.

இதனிடையே கடந்த வார இறுதியில் அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் அது திரையிடப்பட்ட பின்னர் பிரதமர் துறை முதுநிலை அதிகாரி ஒருவர் பெர்சே அமைப்பைக் குறை கூறியதை அவர் நிராகரித்தார்.

பெர்சே ‘இந்த நாட்டை துஷ்டராக’ காட்ட முயலுகிறது என்றும் மேற்கத்திய அம்சங்களை கொண்டு வர முயலுகிறது என்றும் அந்த அதிகாரி தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் பற்றிக் குறிப்பிட்ட மரியா அவை வெறும் நகைச்சுவை எனக் கேலியாகச் சிரித்தார்.razak2

ஏனெனில் மக்கள் ஆதரவுடன் எத்தகைய வெளிநாட்டுத் தரப்பும் சம்பந்தப்படாமல் தூய்மையான நியாயமான  தேர்தல்களுக்கு பெர்சே போராடுவதை அனைவரும் அறிவர் என அவர் சொன்னார்.

“நான் மீண்டும் சொல்கிறேன். பெர்சே-க்கு மலேசியர்களுடைய முழு ஆதரவு உண்டு. ஏனெனில் நாங்கள் கூடும் போது எங்களுடன் இணைந்து கொள்வது அந்நியர்கள் அல்ல.”

“எங்கள் நடவடிக்கைகளின் அடிப்படையில் பொது மக்கள் எங்களைப் பற்றி முடிவு செய்யலாம். எங்கள் நடவடிக்கைகளும் நிலையும் மக்களுக்கு அணுக்கமானவை,” என்றும் மரியா குறிப்பிட்டார்.

அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழக மாணவர்கள் ‘மயங்க மாட்டார்கள்’

அந்த அதிகாரியின் ‘ஆதாரமற்ற’ குற்றச்சாட்டுக்களுக்கு அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழக மாணவர்கள் ‘மதி மயங்க’ மாட்டார்கள் என அவர் நம்புகிறார்.

மலேசியாகினி நேற்று சம்பந்தப்பட்ட அதிகாரியுடன் தொடர்பு கொள்ள முயன்றது. ஆனால் இன்னும் பதில் கிடைக்கவில்லை.

இரண்டு மணி நேரத்துக்கு அந்தப் படம் திரையிடப்பட்ட பின்னர் அந்த அதிகாரி கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு 400 மாணவர்கள் முன்னிலையில் அதனை ‘மறு ஆய்வு’ செய்தார். அப்போது அவர் மலேசியாகினியையும் பெர்சே அமைப்பையும் இழிவுபடுத்திப் பேசினார் என்று இஸ்லாத்துக்காக ஒன்றுபடுவோம் என்ற அமைப்பின் தலைவர் முகமட் நஜிப் அப்துல் ரஹிம் கூறினார்.

“பெர்சே, மலேசியாகினி போன்ற அந்நிய ஏஜண்டுகள் மலேசியவை துஷ்டராகக் காட்டுவதற்கு வந்துள்ளன என அவர் சொன்னார்,” என முகமட் நஜிப் கூறிக் கொண்டார்.

razakஇன ரீதியாக அந்தத் திரைப்படத்தின் மறு ஆய்வு இருந்தது என்றும் அந்தப் படம் பொது மக்களுக்குக் காட்டப்பட்டால் பதற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் சொன்னார்.

அந்தத் திரைப்படம் இரண்டாவது பிரதமர் அப்துல் ரசாக் ஹுசேன், துணைப் பிரதமர் இஸ்மாயில் அப்துல் ரஹ்மான் ஆகியோரையும் மே 13 கலவரங்களுக்குப் பின்னர் நாட்டைக் காப்பாற்றுவதற்கு அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் சித்தரிக்கின்றது.

அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தைத் தவிர புத்ரா உலக வாணிக வளாகத்தில் கடந்த மாதம் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் உட்பட மூவாயிரம் பேருக்கு ரகசியமாக தண்டா புத்ரா திரைப்படம் காட்டப்பட்டது.

கடந்த நவம்பர் மாதம் மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் அது திரையிடப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அது ரத்துச் செய்யப்பட்டு அந்தத் திரைப்படம் மீதான விவாதம் நடத்தப்பட்டது.

பொது மக்களுக்கு தண்டா புத்ரா திரையிடப்படுவதற்குப் பொருத்தமானது அல்ல என அமைச்சரவை நவம்பர் மாதம் முடிவு செய்திருந்தும் அது தெரிவு செய்யப்பட்ட ரசிகர்களுக்குக் காட்டப்படுகின்றது.