வேட்பாளர் பட்டியலை மீளாய்வு செய்யும் கிள்ளான் எம்பியின் முயற்சி நிராகரிக்கப்பட்டது

1mpகிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு, தமது நாடாளுமன்றத் தொகுதிக்கான முதன்மை வாக்காளர் பட்டியலையும் துணை வாக்காளர் பட்டியலையும் மீளாய்வு செய்ய வேண்டுமென்று தாக்கல் செய்த மனுவை ஷா ஆலம் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

அதைத் தள்ளுபடி செய்த நீதிபதி வெர்னோன் ஒங், தேர்தல் சட்டம் 1958, பகுதி 9ஏ-இன்கீழ் அரசிதழில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய இயலாது என்றார்.

எம்பி-யின் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தால் தேர்தல் ஆணையத்தைக் கட்டாயப்படுத்தவும் முடியாது. அதற்கும் சட்டம் இடம்தரவில்லை.

1mp1எனவே, சார்ல்ஸ் சந்தியாகுவின் மனு ஒரு வீண் முயற்சி என நீதிமன்றம் தீர்மானித்தது.

“அந்த வகையில் நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்கிறது.  பொதுநலனைக் கருத்தில் கொண்டு தொடுக்கப்பட்ட வழக்கு என்பதால் நீதிமன்றச் செலவைக் கொடுக்குமாறு  உத்தரவிடப்போவதில்லை”, என்று நீதிபதி ஒங் கூறினார்.

தீர்ப்பு தொடர்பில் எதிர்வினையாற்றிய சார்ல்ஸ் (படத்தில் வலம் இருப்பவர்),  தேர்தல் சட்டம் பகுதி 9ஏ,  அரசமைப்பின் அதிகாரவரம்பை மீறுவதை நீதிமன்றம் கவனிக்கத் தவறிவிட்டது என்றார்.

வாக்காளர் பட்டியல்களில் ஆவி வாக்காளர்கள் இடம்பெற்றிருப்பதைத் தாம் போதுமான அளவுக்கு எடுத்துக்காட்டி இருப்பதாக அவர் சொன்னார்.

“ஆனால், நீதிமன்றத் தீர்ப்பு ஆவி வாக்காளர்களைச் சட்டப்பூர்வமாக்கி விட்டது”, என்று சார்ல்ஸ் கூறினார்.

TAGS: