பக்காத்தான் ராக்யாட் தேர்தல் கொள்கை அறிக்கை சில ஆண்டுகளில் நாட்டைத் திவாலாக்கி விடும் என பிஎன் குறை கூறுகிறது. ஆனால் பிஎன் தேசியக் கருவூலத்துக்கு அதனை விட மோசமாக செய்துள்ளது என டிஏபி தேர்தல் வியூகவாதி ஒங் கியான் மிங் கூறுகிறார்.
2008க்கும் 2011க்கும் இடையில் கூட்டரசு அரசாங்கம் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை விட கூடுதலாக 44 பில்லியன் ரிங்கிட் செலவு செய்துள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். அந்தத் தொகையில் 2011ம் ஆண்டு வரைக்குமான அவசரப் பொறுப்புக்கள் ( contingent liabilities )என வகைப்படுத்தப்பட்டுள்ள 117 பில்லியன் ரிங்கிட் சேர்க்கப்படவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் கூட்டரசு வரவு செலவும் கூடுகின்றது. 2013 வரவு செலவுத் திட்டத்தில் மொத்தம் 30 பில்லியன் ரிங்கிட் பெறும் 56 புதிய செலவினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பக்காத்தான் ராக்யாட் அதற்கு நேர்மாறாக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மொத்தம் 45 பில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட புதிய செலவுகளையே கொள்கை அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
“ஆகவே அந்தத் திட்டங்களுக்கு நீங்கள் எப்படிப் பணம் கொடுக்கப் போகின்றீர்கள் என பிஎன் வினவுகிறது. அதே கேள்வி பிஎன் -னிடமும் கேட்கப்பட வேண்டும்.”
“நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வரவு செலவுத் திட்டத்திலும் புதியவற்றுக்குச் செலவு செய்வதற்காக புதிய திட்டங்களை அறிவிக்கின்றீகள். பிஎன் -உடன் ஒப்பிடுகையில் நாங்கள் மிகவும் பொறுப்பானவர்கள் என எண்ணி பணத்தைச் செலவு செய்வதற்குப் புதிய வழிகளை பக்காத்தான் ராக்யாட் அறிவிப்பதில் என்ன தவறு ?” என அவர் கேட்டார்.
அரசியல் ஆய்வாளருமான ஒங், நேற்றிரவு பெட்டாலிங் ஜெயாவில் தேர்தல் கொள்கை அறிக்கை மீது நிகழ்ந்த ஆய்வரங்கு ஒன்றில் பேசினார். அதில் பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயிலும் பாஸ் கட்சியின் கோலா சிலாங்கூர் எம்பி சுல்கெப்லி அகமட்டும் பேசினார்கள்.
பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கையைக் குறை கூறும் பிஎன் -னுக்கு கூட்டல் கணக்குப் போடத் தெரிய வில்லை என ராபிஸி தமது உரையில் கிண்டல் செய்தார். அந்த அறிக்கையில் காணப்படும் முக்கியத் திட்டங்களுக்கான செலவுகளையும் அவர் விவரமாக எடுத்துரைத்தார்.