கெடாவின் பக்காத்தான் ரக்யாட் அரசு, அந்நிய முதலீட்டைக் கவரத் தவறிவிட்டது என்று கூறிய ஊராட்சி, வீடமைப்பு அமைச்சர் சோர் சீ ஹுவாங்கை கெடா பிகேஆர் கண்டித்துள்ளது.
மசீச உதவித் தலைவருமான சோர், கெடா முந்தைய பிஎன் அரசு விட்டுச் சென்ற நிதியை வைத்துப் பிழைத்துக் கொண்டிருப்பதாக சீனமொழி ஊடகங்களிடம் கூறியிருந்தார்.
“பொதுத் தேர்தல் வரவில்லை என்றால், கெடா அரசு அதன் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க மத்திய அரசிடமிருந்து கடன் வாங்கி இருக்கும்”, என்று சோர் சின் சியு டெய்லியிடம் தெரிவித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சோர் “தவறான எண்ணத்தைத் தோற்றுவிக்கும் வகையில் பேசுவதையும்” பிஎன்னுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக கெடா மக்களைப் பயமுறுத்துவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என கெடா பிகேஆர் சட்ட விவகாரப் பிரிவுத் தலைவர் கூய் ஹிசியாவ் லூங் கூறினார்.
பிஎன்னிடமிருந்து அம்மாநிலத்தைக் கைப்பற்றியதிலிருந்து, பாஸ் தலைமையிலான அரசு நல்ல முறையில் நிர்வகித்து வந்துள்ளதாகக் கூறிய கூய், கூலிம் உயர்தொழில்நுட்பப் பூங்காவுக்கு மட்டுமே அது ரிம12.14 பில்லியன் முதலீட்டைக் கவர்ந்திருகிறது என்றார்.
“இது 20,464 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது”.
பிஎன் ஆட்சி செய்த கடைசி 12 ஆண்டுகளில் கெடாவுக்கு அது ரிம19.36 பில்லியன் முதலீட்டைத்தான் கொண்டு வர முடிந்தது. அதாவது ஆண்டுக்கு ரிம1.613 மட்டுமே.
“இதை பக்காத்தான் ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்ட முதலீட்டுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். கடந்த நான்காண்டுகளில் அது ஆண்டுக்கு சராசரி ரிம3.056 பில்லியன் மதிப்புள்ள முதலீட்டை ஈர்த்துள்ளது.
கெடா பிஎன் விட்டுசென்ற பண இருப்பை வைத்துத்தான் பிழைப்பு நடத்துகிறது என்றும் அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க அது மத்திய அரசிடம் விரைவில் கடனுக்குக் கையேந்தும் என்றும் சோர் கூறியிருப்பது “அடிப்படையற்றது, ஒரு பொய்யான கூற்று” என கூய் குறிப்பிட்டார்.
“கெடா கடந்த ஐந்தாண்டுகளில் அதன் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க மத்திய அரசிடமிருந்து கடன் வாங்கியதே இல்லை”, என்றார்.
“கெடா அரசு பிஎன் விட்டுசென்ற பணத்தை வைத்துத்தான் பிழைப்பு நடத்துகிறது என்று கூறும் சோர் அதற்கான ஆதாரங்களைக் காண்பிக்க தயாரா”, எனவும் சவால் விடுத்தார்.
இப்படி அபாண்டம் கூறுவதை விடுத்து, பிஎன் ஆட்சி செய்த காலத்தில் “கேள்விக்குரிய முறையில் குத்தகைகள்” கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டிருப்பதில் சோர் கவனம் செலுத்துவது நல்லது என கூய் கூறினார்.
“அதனால் மாநில அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும், நிர்வாகக் கோளாறு காரணமாக ரிம403 மில்லியன் அளவுக்கு செலவுகளை அதுவே ஏற்க நேர்ந்தது என்றும் சொல்லப்படுகிறது”, என்றாரவர்.