குற்றம்செய்யும் டெக்சி ஓட்டுனர்களைப் பிடிக்க வேண்டும், கெராக்கான் வலியுறுத்து

1taxiஅமெரிக்கச் சுற்றுப்பயணி ஒருவர், பாலியல் வன்புணர்ச்சிக்கு  ஆளான சம்பவம் அதிகாரிகள் டெக்சி ஓட்டுனர்களை அதிகம் கண்காணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக கெராக்கான் மத்திய செயலவை உறுப்பினர் டாக்டர் சியா சூன் ஹாய் கூறினார்.

1cheahசியா இன்று வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில் டெக்சி ஓட்டுனர்கள் பயணிகளுக்கு எதிராக செய்யும் குற்றச்செயல்கள் பற்றி அதிகம் அதிகமாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன என்றார்.  இது டெக்சி தொழிலின் பெயரைக் கெடுக்கும்.

“இப்போது அது இன்னும் மோசமாகி, வெளிநாட்டவர் ஒருவர் கற்பழிக்கப்பட்டுள்ளார். இது நாட்டுக்கு மாறா அவமானத்தை ஏற்படுத்தும் சம்பவமாகும்”, என்றாரவர்.

டெக்சி தொழிலுக்கு எதிராக ஏற்பட்டுள்ள எதிர்மறையான  தோற்றத்தைக் களைய வேண்டும். இல்லையேல் நேர்மையான டெக்சி ஓட்டுனர்களும் பாதிக்கப்படுவர்.

அந்த வகையில் நிலப் பொதுப்போக்குவரத்து ஆணையம் (ஸ்பேட்) பயணிகளுக்குப் பாதுகாப்பு அளிக்க முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

இரு ஆடவர்கள் டெக்சி ஓட்டுனர்கள்போல் நடித்து 24-வயது அமெரிக்கப் பெண்ணொருவரை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய சம்பவம்  குறித்து கருத்துரைத்தபோது சியா இவ்வாறு கூறினார்.

அவர்களிடமிருந்து தப்பிய  அப்பெண், போலீசில் புகார் செய்தார்.  அதைத் தொடர்ந்து சந்தேகத்துக்குரிய ஒரு நபர் பிடிபட்டார். அவர் இப்போது விசாரிக்கப்பட்டு வருகிறார்.

அவ்விருவரும், தனியாக பயணம் செய்யும் பெண்களைக் கடத்திசெல்வதில் கைவரிசை காட்டும் ஒரு கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என நம்பப்படுவதாக கோலாலும்பூர் சிஐடி தலைவர் கூ சின் வா கூறினார்.

அக்கும்பலைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.  ஆனால், சிலர் இன்னும் வெளியில் மறைந்து திரிகிறார்கள்.