வோங் தாக்: நான் பசுமை இயக்கத்திலிருந்து விலக மாட்டேன்

wongஅடுத்த பொதுத் தேர்தலில் பெந்தோங் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்குத் தாம் டிஏபி சின்னத்தைப் பயன்படுத்திய போதிலும் தாம் நாட்டின் பசுமை இயக்கத்தை பிரதிநிதிப்பதாக ஹிம்புனான் ஹிஜாவ் தலைவர் வோங் தாக் கூறியிருக்கிறார்.

ஆகவே ஹிம்புனான் ஹிஜாவ் தலைவர் பதவியைத் தாம் துறக்க வேண்டிய அவசியமில்லை என அவர்  சொன்னார்.

ஹிம்புனான் ஹிஜாவ்  ஒர் அதிகாரத்துவ அமைப்பு என்பதை விட ஒர் இயக்கம் எனச் சொல்வதே பொருத்தமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“நீங்கள் என்னைப் பதவி விலகுமாறு கேட்டுக் கொண்டால் நான் என்னுடைய பதவித் துறப்பை யாருக்கு அனுப்புவேன் ?” என அவர் வினவினார்.

“நீங்கள் என்னைத் தலைவர் என அழைக்க விரும்பவில்லை என்றால் என்னை ‘Uncle Wong’ எனக் கூறலாம்,” என அவர் மலேசியாகினி தொடர்பு கொண்ட போது சொன்னார்.

பதவி விலகுமாறு தமக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள் ‘பொருத்தமற்றது’ என அவர் மேலும் குறிப்பிட்டார்.

வோங் ஹிம்புனான் ஹிஜாவ் தலைவர் பதவியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என அந்த அமைப்பின் செயற்குழு உறுப்பினரான கிளிமெண்ட் சின் கேட்டுக் கொண்டார்.

ஹிம்புனான் ஹிஜாவ் தொடர்ந்து மக்களை மய்யமாகவும் அரசியல் சார்பற்ற அரசு சாரா அமைப்பாகவும் திகழ்வதற்கு நடப்பு செயற்குழு புதிய தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும்,” என்றும் சின் சொன்னார்.

13வது பொதுத் தேர்தலில் பெந்தோங்கில் சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய்க்கு எதிராக வோங் டிஏபி சின்னத்தின் கீழ் நிறுத்தப்படுவார் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் அறிவித்ததற்கு அடுத்த நாள் சின் அந்தக் கோரிக்கையை விடுத்தார்.