டிஏபி இணையத் தளம் கடந்த வாரம் மூன்று முறை அரசியல் நோக்கத்திற்காக பிஎன் ஆதரவாளர்கள் வழங்கிய நிதி உதவியுடன் விநியோகச் சேவை மறுப்பு (DDOS) தாக்குதலுக்கு இரையானதாக கூறப்பட்டுள்ளது.
டிஏபி இணையத் தளத்தின் அமெரிக்க சர்வர் (dapmalaysia.org)கடந்த வாரம் மூன்று முறை தாக்கப்பட்டதாக அதன் பிரச்சாரப் பிரிவுச் செயலாளர் டோனி புவா கூறினார்.
“அதன் மலாய் செய்தி இணையத் தளமான Roketkini-க்கும் சேதம் ஏற்பட்டுள்ளது,” என அவர் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அந்த இணையத் தளத்தை இணையக் குடிமக்கள் வாசிப்பதை நிறுத்த முடியுமா என்பதை “சோதிப்பதே” அந்தத் தாக்குதல்களின் நோக்கம் என அவர் நம்புகிறார்.
பொதுத் தேர்தல் நெருங்கும் போதும் பொதுத் தேர்தலின் போதும் தாக்குதல்கள் அதிகமாகும் என புவா கருதுகிறார்.
“அத்தகைய சூழ்நிலைகளில் அரசியல் நோக்கம் கொண்ட அந்தத் தாக்குதல்களுக்கு பிஎன் ஆதரவாளர்கள் நிதி உதவி செய்கின்றனர் என்று மட்டுமே நாங்கள் ஊகிக்க முடியும்,” எனக் குறிப்பிட்ட அவர், பிஎன் அதனைச் செய்திருக்கக் கூடிய சாத்தியத்தையும் மறுக்கவில்லை.
பக்காத்தான் ராக்யாட் இணையத் தளம், மலேசியாகினி, மலேசியா இன்சைடர் போன்ற செய்தி இணையத் தளங்கள் ஆகியவை அடிக்கடி தாக்கப்படுவதாலும் பிஎன் இணையத் தளம் தாக்கப்படுவதாக எந்தச் செய்தியும் இல்லை என்பதாலும் அவ்வாறு எண்ண வேண்டியுள்ளதாக புவா மேலும் குறிப்பிட்டார்.