மலாக்கா பிகேஆர் தலைமையகத்துக்கு முன்பு பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா உருவப்படத்துடன் போலிச் சவப்பெட்டி ஒன்று இன்று கண்டு பிடிக்கப்பட்டது.
கறுப்புத் துணி மூடப்பட்ட அந்த பாலிதின் பொருளினால் தயாரிக்கப்பட்ட அந்த போலி சவப்பெட்டியை கட்சி ஊழியர் ஒருவர் கண்டு பிடித்ததாக மலாக்கா மாநில பிகேஆர் தகவல் பிரிவுத் தலைவர் ஹைரிஸ் நோர்டின் கூறினார்.
‘சவப் பெட்டி சம்பவம் சுவா-வின் லஹாட் டத்து கருத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என நான் சந்தேகிக்கிறேன்,” என்றும் ஹைரிஸ் குறிப்பிட்டார்.
என்றாலும் அந்த விஷயம் பற்றி தியான் சுவாவின் கருத்துக்களை மலேசியாகினி மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை.
லஹாட் டத்துவில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு அம்னோ அரசாங்கத்தின் சதித் திட்டம் மார்ச் மாதம் முதல் தேதி காலை மணி 11 வாக்கில் சொன்னதாக 1948ம் ஆண்டுக்கான தேச நிந்தனைச் சட்டத்தின் பிரிவு 4 (1) (b) யின் கீழ் பத்து தொகுதிக்கான எம்பி-யுமான தியான் சுவா மீது நேற்று குற்றம் சாட்டப்பட்டது.
அவர் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார். கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் அவருக்கு 5,000 ரிங்கிட் ஜாமீன் தொகையை நிர்ணயித்தது.
இதனிடையே அந்த போலிச் சவப்பெட்டி சம்பவம் கொலை மருட்டல் என பிகேஆர் இளைஞர் தலைவர் சம்சுல் இஸ்காண்டார் முகமட் அக்கின் கூறியுள்ளார்.
“நாகரீகமற்ற அந்த நடவடிக்கையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்,” என அவர் வலியுறுத்தினார்.
லஹாட் டத்து மீது தாம் தெரிவித்த கருத்துக்களை அடுத்த செவ்வாய்க்கிழமை மலாக்கா பிகேஆர் தலைமையகத்தில் நிகழும் செராமா ஒன்றுல் தியான் சுவா விளக்குவார் என்ற தகவலையும் அவர் வெளியிட்டார்.
கடந்த வெள்ளிக் கிழமை மலாக்காவில் பிகேஆர் செராமா ஒன்றுக்கு இடையூறு செய்யப்பட்டதால் கட்சி பாதுகாப்பை வலுப்படுத்துமா என்ற கேள்விக்குப் பதில் அளித்த சம்சுல், போலீசாருக்கு தகவல் கொடுப்பதின் மூலமும் மேடையில் அதிகமான கட்சி உறுப்பினர்களை நிறுத்துவதின் மூலமும் தாங்கள் அவ்வாறு செய்யப் போவதாகவும் தெரிவித்தார்.
வெள்ளிக் கிழமை சம்பவத்தில் அம்னோ உறுப்பினர்கள் எனக் கூறப்படும் குண்டர்கள். பிகேஆர் கட்சியின் ‘Jelajah Merdeka’ என்ற பிரச்சாரப் பஸ்ஸை கற்களையும் மற்ற பொருட்களையும் கொண்டு தாக்கினர்.
அப்போது ஏற்பட்ட குழப்பத்தில் பல பக்காத்தான் ராக்யாட் ஆதரவாளர்களும் இரண்டு போலீஸ் அதிகாரிகளும் காயமடைந்தனர்.