பக்காத்தான் ‘பொய்களை’ முறியடிக்கும் இயக்கத்தை பிஎன் இளைஞர்கள் தொடங்கினர்

BNபொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் பக்காத்தான் ராக்யாட் பிரச்சாரத்தை முறியடிப்பதற்கு பெரிய அளவிலான இயக்கத்தை பிஎன் இளைஞர்கள் தொடங்கியுள்ளனர்.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதும் அந்த இயக்கத்தில் அடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மங்கோலிய மாது அல்தான்துயா ஷாரிபு-உடனும் தமது நெருங்கிய நண்பர் அப்துல் ரசாக் பகிந்தாவுடனும் உணவு உட்கொள்வதாக காட்டும் பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா ஜோடித்த படம் உட்பட பல பிரச்னைகள் இயக்கத்தின் போது எழுப்பப்படும்.

அந்த 2007 படம் மீது போலீஸும் மலேசிய பல்லூடக, தொடர்பு ஆணையமும் சுவா-வை விசாரித்துள்ளன.

‘Gerakan Menolak Penipuan Pembangkang’ (Gempak) என அழைக்கப்படும் அந்த இயக்கத்தை பிஎன் இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் கோலாலம்பூரில் தொடக்கி வைத்தார்.BN1

‘அவதூறுகளையும் பொய்களையும் பரப்பும்’ கலாச்சாரத்தை எதிர்த்தரப்புக் கூட்டணி பின்பற்றுவதாக அவர் தமது உரையில் குற்றம் சாட்டினார்.

மலேசியாவில் 300,000 நாடற்ற இந்தியர்கள் இருப்பதாக பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் கூறிக் கொள்வது பக்காத்தான் தயாரித்த இன்னொரு ‘தவறான தகவல்’ என அவர் சொன்னார்.

“பிஎன் மீது வெறுப்பைத் தூண்டும் பொருட்டு பாஸ், டிஏபி, பிகேஆர் ஆகியவை அவதூறான எதிர்மாறான பிரச்சாரத்தைச் செய்வதாக நாங்கள் நம்புகிறோம்,” என கைரி குறிப்பிட்டார்.

“வரும் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அத்தகைய பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தும் என நாங்கள் கவலைப்படுகிறோம்.”

‘தண்டா புத்ரா’ பற்றி கருத்து இல்லை

விளம்பரம் தேடுவதற்காக மற்றவர்கள் மீது அவதூறு சொல்லும்  வரலாற்றை எதிர்க்கட்சிகள் கொண்டுள்ளன என்பதை மக்களுக்கு உணர்த்துவதே அந்த இயக்கத்தின் நோக்கம் என்றும் கைரி தெரிவித்தார்.

BN2ஆகவே துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள், முகநூல், டிவிட்டர் ஆகியவை வழியாக பக்காத்தான்  அறிக்கைகளை முறியடிக்கும் பொருட்டு பிஎன் இளைஞர் பிரிவு தனது உறுப்பினர்களை ஒன்று திரட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய ‘தண்டா புத்ரா’ திரைப்படம் பொது மக்களுக்கு திரையிடப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ள யோசனையை அவர் ஒப்புக் கொள்கிறாரா என கைரியிடம் வினவப்பட்டது. அதற்குப் பதில் அளிக்க அவர் மறுத்து விட்டார்.BN3

 

எதிர்வரும் பொதுத் தேர்தலைச் சீகுலைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிடுவதாக கூறப்படுவதற்கு ஆதாரங்களை துணைப் பிரதமர் முஹைடின் யாசின் தெரிவிக்க வேண்டுமா என்ற கேள்விக்கும் மறுமொழி கூற கைரி  மறுத்து விட்டார்.