2006ம் ஆண்டுக்கும் 2010ம் ஆண்டுக்கும் இடையில் தேசிய அல்லது தேசிய வகை இடைநிலைப் பள்ளிக்கூடங்களில் 10 மாணவர்களுக்கு ஒருவர் படிப்பை பாதியில் கைவிடுவதாக இன்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
தொடக்கப்பள்ளிகளில் அந்த விகிதம் 1.32 விழுக்காடாகவும் இடைநிலைப்பள்ளிகளில் அந்த விகிதம் 9.42 விழுக்காடாகவும் இருப்பதாக கல்வித் துணை அமைச்சர் வீ கா சியோங் இன்று மக்களவையில் தெரிவித்தார்.
“தேசியப் பள்ளிகளில் 0.7 விழுக்காடாகவும் தேசிய மாதிரி சீனத் தொடக்கப்பள்ளிகளில் அது 4.24 விழுக்காடாகவும் தேசிய வகை தமிழ் தொடக்கப்பள்ளிகளில் 1.41 விழுக்காடாகவும் அந்த விகிதம் இருந்தது”, என அவர் சொன்னதாக பெர்னாமா கூறியது.
2006ம் ஆண்டு தொடக்கம் 2010ம் ஆண்டு வரையில் பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர் எண்ணிக்கை பற்றி கேள்வி எழுப்பிய லோக் சியூ பூக்-கிற்கு வீ பதில் அளித்தார்.
என்றாலும் அந்தப் புள்ளி விவரத்தில் இடம் பெற்றுள்ள மாணவர்கள் அனைவரும் பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்டதாக கருத முடியாது என என வீ சொன்னார். காரணம் அவர்கள் தனியார் கல்வி நிலையங்களிலும் சேர்ந்திருக்கக் கூடும்.
“கல்வி அமைச்சின் 2010ம் ஆண்டு ஜுன் மாதத்திற்கான புள்ளிவிவரப்படி, தனியார் தொடக்க, இடைநிலைப் பள்ளிக்கூடங்களில் மொத்தம் 140,000 மாணவர்கள் கல்வி கற்றனர்.”
“அந்த எண்ணிக்கையில் மாநில அரசுகளின் தொடக்க, இடைநிலை சமயப் பள்ளிக்கூடங்களில் உள்ள 56,000 மாணவர்களும் மக்கள் சமயப் பள்ளிகளில் பயிலும் 36,000 மாணவர்களும் சேர்க்கப்படவில்லை,” என்றார் அவர்.
கட்டாய இடைநிலைக் கல்வி அமலாக்கப்படவில்லை என்றாலும் தொழில் பள்ளிக்கூடங்கள், தொழில் தேர்ச்சி மய்யங்கள் போன்ற மாற்று வழிகள் இருப்பதாகவும் வீ குறிப்பிட்டார்.
பள்ளிப்படிப்பை மாணவர்கள் பாதியில் கைவிடுவதை தடுப்பதற்கான வழி வகைகள் மீது தமது அமைச்சு ஆய்வு ஒன்றை மேற்கொண்டு வருவதாகவும் 2012க்குள் அந்த ஆய்வு முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கல்வித் துணை அமைச்சர் சொன்னார்.
“பள்ளிப்படிப்பை மாணவர்கள் பாதியில் கைவிடுவதை அந்த ஆய்வு தடுக்க இயலும் என கல்வி அமைச்சு நம்புகிறது.”