‘இலவசக் கல்வியால் மலேசியா போண்டியாகிவிடாது’

1edu

உங்கள் கருத்து  ‘இலவசக் கல்வி வழங்குவது நல்லதுதான். ஆனால், அதில் ஊழலை அடியோடு ஒழிக்க வேண்டும்.பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கள் குறைந்தபட்ச தகுதியாவது கொண்டிருக்க வேண்டும்’

பிடிபிடிஎன்-னைத் தடுத்து நிறுத்த வேண்டும், இல்லையேல் நாடு நொடித்துப் போகும் என்கிறார் ரபிஸி

ஜிஎச்கொக்: பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி சொல்வதில் நியாயமிருக்கிறது. அது நல்ல கொள்கைதான். கடனளிப்பது எல்லாவற்றுக்கும் தீர்வாகிவிடாது.

கல்விக்கான செலவு ஒரு பிரச்னை என்றால், அது ஏன் என்பதை ஆராய வேண்டும். கூடுதல் நிதியைக் கடன் கொடுப்பது மட்டும் அதற்குத் தீர்வாகாது.

மலேசியாவில் தனியார் கல்லூரி படிப்புக்காகும் செலவு மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது அளப் பெரிது. பிடிபிடிஎன் (தேசிய உயர்க்கல்வி நிதி) கடன்களில் பெரும்பகுதி அதற்குத்தான் செல்கிறது.

கேஎஸ்என்: ரபிஸி சொல்வது சரியே. பிடிபிடிஎன் கடனை நீடித்து வைத்திருக்க முடியாது. காலப்போக்கில் அதனால் நாட்டின் நிலைநிலை பாதிப்புறும். அதை விரைந்து மறுபரிசீலனை செய்வது அவசியமாகும்.

மலேசியர்களை விரும்புவோன்:  அப்படியானால் இலவசக் கல்விதான் அதற்குத் தீர்வா? ரபிஸி தந்திரமாக பேசுகிறார். ஆனால், அது அபத்தமான கருத்து.

இலவசக் கல்வி என்பது நன்னீரைக் கடலுக்குள் பாய்ச்சுவதற்கு ஒப்பாகும்.

ஆண்டுக்காண்டு அதற்கு பில்லியன் கணக்கில் செலவிட வேண்டியிருக்கும். அதனால் நாடு போண்டியாகி விடும். ஆனால், கடன் அப்படிப்பட்டதல்ல. யாரால் திருப்பிக் கொடுக்க முடியுமோ அவர்கள்தான் கடனைப் பெறுவார்கள்.

விழித்துக்கொண்டவன்:  நாட்டின் வருமானத்தில் 45 விழுக்காட்டை வழங்குவது பெட்ரோலியம்.  இந்த இயற்கை வளத்தைப் பெற்றிராத நாடுகளால் சமச்சீரான வரவு-செலவுத் திட்டத்தைத் தயாரிக்க முடிகிறது என்றால்,  நமக்கு 45விழுக்காடு பெட்ரோலியம் என்பது உண்மையில் ஒரு போனஸாகும்.

இந்த போனஸை வைத்து கல்வி, மருத்துவச் செலவுகளையும் மற்ற அடிப்படைக் கட்டுமானச் செலவுகளையும் சரிக்கட்ட முடியும்.  தென் கொரியா, தைவான், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் எப்படி வரவு-செலவைச் செய்கின்றன என்பதை ஆராய்ந்தால் கல்வி, மருத்துவ உதவி, சாலைக்கட்டணம் ஆகியவற்றை இலவசமாக்குவது சாத்தியமே.

இந்தப் பெட்ரோலிய போனஸ் எங்கு சென்றது? அங்கீகரிக்கப்பட்ட உரிமங்களுக்கு நிதியுதவி அளிக்கவும், திட்டங்களுக்காகும் செலவு எகிறும்போது அதைச் சரிக்கட்டவும், தேசிய ஃபீட்லோட் கார்ப்பரேசன் (என்எப்சி) போன்ற உதவாக்கரை திட்டங்களுக்குப் பண உதவி செய்யவும், பெர்வாஜா எஃகு திட்டம் போன்றவற்றை மீட்டெடுக்கவும், அன்னியச் செலாவணி இழப்புகளை ஈடு கட்டவும் இன்ன பிறவற்றுக்கும் பயன்படுத்திக்கொள்ளப்படுகிறது.

பெட்ரோலிய போனஸ் சரியாகப் பயன்படுத்தப்பட்டால் மக்களுக்கு பெரும் நன்மை கிட்டும். அதன்பின் பொருள், சேவை வரி ஏன், வருமான வரிகூட தேவைப்படாது.

முஷிரோ:  ரபிஸி நடப்பு அரசு செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது யாரும் அதை ஏற்பதில்லை, விவாதிக்கவும் முன்வருவதில்லை.

அவை எல்லாமே  பொய் என்று சொல்லி மூடி மறைக்கப் பார்ப்பார்கள். ஆனால், உண்மை என்னவெனில், மக்கள் நஜிப்பையோ மற்ற அம்னோ தலைவர்களையோ நம்புவதைவிட ரபிஸி சொல்வதைத்தான் நம்புகிறார்கள்.

எச்பேசில்:  இலவசக் கல்வி வழங்குவது நல்லதுதான். ஆனால், அதில் ஊழலை அடியோடு ஒழிக்க வேண்டும். பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கள் குறைந்தபட்ச தகுதியாவது கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் கல்விக்காகச் செய்யப்படும் செலவுக்கு ஒரு அர்த்தம் இருக்கும்.

முதலில் தரமற்ற உயர்கல்வி மையங்களை மூட வேண்டும்.  அவற்றின் திறனற்ற பணியாளர்களை வெளியேற்ற வேண்டும். அதன்வழி பல மில்லியன் மிச்சப்படும்.  இலவசக் கல்வியைக் கொண்டு வருமுன் பல முக்கியமான மாற்றங்களைச் செய்தாக வேண்டும்.

விழிப்பானவன்:  மலேசிய அரசாங்கப் பள்ளிகளில் பயில்வதற்கு நிறைய செலவாவதில்லை. நான் 80-களில் யுனிவர்சிடி சயின்ஸ் மலேசியாவில் பயின்றபோது ஆண்டுக்கு சுமார் ரிம700 செலவானது.  இது பாலர்பள்ளிக் கட்டணத்தைவிடவும் குறைவு..

இன்றுகூட அரசுப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வது கட்டுப்படியானதுதான்.  கிட்டத்தட்ட இலவசமாகவே கல்வி கிடைக்கிறது எனலாம்.  ஆண்டுக்கு ரிம2000 செலவாகலாம்.  ஆனால், மோனாஷ், கேடியு, ஹெல்ப் போன்ற தனியார் கல்வி மையங்களில்தான் கல்விக்கு நிறைய செலவிட வேண்டியுள்ளது. பொறியியல் கல்விக்கு இவை  ஆண்டுக்கு ரிம30,000-ரிம40,000 வரை கட்டணம் வசூலிக்கின்றன.

பெட்ரோனாஸ் பல்கலைக்கழகம் போன்ற பகுதி-அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் ஆண்டுக்கட்டணம் ரிம 20,000. என்னைக் கேட்டால் 100/100 இலவசக் கல்வி தீர்வாகாது. கட்டுப்படியான கல்வி என்பதே சரியான தீர்வாகும்.

அரசாங்கம், பகுதி-அரசாங்கப் பல்கலைக்கழகங்களுக்கு நிதியுதவி அளித்து அங்கு கல்வி கட்டுப்படியான கட்டணத்தில் கிடைப்பதற்கு வகை செய்ய வேண்டும்

 

TAGS: