அஸ்ரி பிகேஆர் வேட்பாளராகக் களமிறக்கப்படுவது சந்தேகமே

1asri

பிரபல சமய அறிஞர் அஸ்ரி சைனல் அபிடின், வரும் தேர்தலில் பிகேஆர் வேட்பாளராக போட்டியிடுவார் என்றுதான் முதலில் பேச்சு அடிப்பட்டது. ஆனால், இப்போது அது சந்தேகம்தான்.

அஸ்ரி இரண்டு வாரங்களுக்குமுன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைச் சந்தித்திருக்கிறார். அதைப் பார்க்கையில்  தேர்தலில் போட்டியிடுவதில் அவருக்கு ஆர்வம் இருப்பதுபோல் தெரியவில்லை என்று பிகேஆர் வட்டாரங்கள் மலேசியாகினியிடம் தெரிவித்தன.

1asri1அஸ்ரி தேர்தலில் போட்டியிட்டு வென்றால் அவருக்குத் துணை முதலமைச்சர் பதவி வழங்குவதாகக் கூட பிகேஆர் உறுதி அளித்திருந்தது.

அவருக்குத் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்று மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமே (வலம்) இருவரும் அண்மையில் சந்தித்தபோது வாக்குறுதி அளித்தாராம்.

அஸ்ரி நேற்றிரவு தம் டிவிட்டர் பக்கத்தில் அண்மையில் பிரதமரைச் சந்தித்துப் பேசியதாகக் குறிப்பிட்டிருந்தார்.

1asri2ஆனால், நஜிப்புடன் அவர் என்ன பேசினார் என்ற விவரம் தெரியவில்லை.

“இரண்டு வாரங்களுக்குமுன் பிரதமர்(இடம்) அவரது அலுவலகத்துக்கு என்னை அழைத்திருந்தார். என் கருத்துகளை அவரிடம் சொன்னேன். உன்னிப்பாகக் கேட்டார். அவருடைய போக்கு எனக்குப் பிடித்திருந்தது”, என்று அஸ்ரி டிவிட்டர் கூறியிருந்தார்.

அஸ்ரிக்கு பிஎன் தலைவர்களுடனும் பக்காத்தான் ரக்யாட் தலைவர்களுடனும் நீண்ட காலமாகவே நெருங்கிய தொடர்புண்டு.

பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது பாஸ் கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்றதன்வழி அவர் பிரபலமானார். பின்னர், ஷகிடான் காசிம் பெர்லிஸ் மந்திரி புசாராக இருந்தபோது அவர் மாநில முப்தியாக நியமனம் செய்யப்பட்டார். 2008 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

அஸ்ரி, பிஎன் தலைவரை மட்டுமல்லாமல் பாஸ் மற்றும் டிஏபி தலைவர்களையும் சந்தித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பாஸும் டிஏபியும்கூட அவரை வேட்பாளராக நிறுத்துவதில் அக்கறை கொண்டிருக்கின்றன.

தேர்தலில் போட்டியிடாமலேயே பங்களிப்பதில் அஸ்ரிக்கு ஆர்வம்

மலேசியாகினி அஸ்ரியைத் தொடர்புகொண்டு பேசியபோது அவர் தேர்தலில் போட்டியிடுவது பற்றிக் கருத்துரைக்க விரும்பவில்லை.

வேட்பாளராக போட்டியிடாமலேயே தேர்தலுக்குப்பின் தம்மால் சேவையாற்ற முடியும் என அஸ்ரி நம்புவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரம் ஒன்று தெரிவித்தது.

பிகேஆர் பல மாதங்கள் பல உயர் தலைவர்கள் மூலமாக அஸ்ரியை வளைத்துப்போட முயற்சி செய்தாலும்கூட அவர் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவில் உறுதியாக இருப்பதுபோல் தெரிகிறது.