அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் ஸர்காஷி, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜோகூரில் களமிறங்குவார் என்று கூறப்படும் டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங், சீனர்கள் பெரும்பான்மையாக இல்லாத ஒரு தொகுதியில் போட்டியிடுவதற்கு முன்வருவாரா என்று சவால் விடுத்துள்ளார்.
போட்டியிடும் இடத்தை லிம் அடிக்கடி மாற்றிக்கொள்வது அவர் பொறுப்பற்ற தலைவர் என்பதைக் காண்பிக்கிறது என்று கல்வி துணை அமைச்சரான புவாட் ஸர்காஷி (வலம்) கூறினார்.
“கிட் சியாங் 13வது பொதுத் தேர்தலில் ஜோகூரில் போட்டியிட விரும்பினால், தாம் சீனர்களால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டவர் அல்லர் என்பதை நிரூபிக்க மலாய்க்காரர் பெரும்பான்மையாக உள்ள ஒரு தொகுதியில் அல்லது பல இனங்களும் சரிசமமான எண்ணிக்கையில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என சவால் விடுகிறேன்”, என்றவர் கூறியதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டிருந்தது.
“ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் தொகுதியை மாற்றிக்கொள்ளும் கிட் சியாங் ஒரு பொறுப்புள்ள தலைவர் அல்லர். அது, அவர் தம் பழைய தொகுதிகளான ஈப்போ தீமோரிலிருந்து (2004, 2008), தஞ்சோங்கிலிருந்து (1986-1989), கோத்தா மலாக்காவிலிருந்து (1982-1986) விலகி ஓடுவதைத்தான் காண்பிக்கிறது.
“ஒரு எம்பி வீரதீரத்தைக் காண்பிப்பதும் வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும் மட்டும் போதாது. சமுதாய நன்மைக்காகக் கடுமையாக உழைக்கவும் வேண்டும். தம் முந்தைய தொகுதிகளுக்கு கிட் சியாங் என்ன செய்தார்? ஆகவே, அவரை ஆதரிப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை”, என அந்த பத்து பாஹாட் எம்பி குறிப்பிட்டார்.
லிம், இன்றிரவு ஸ்கூடாயில் டிஏபி-இன் 47-வது ஆண்டுவிழாவின்போது ஜோகூரில் நாடாளுமன்றத் தொகுதி ஒன்றில் போட்டியிடுவது பற்றி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் மசீசவின் கோட்டையாக விளங்கும் கேளாங் பாத்தாவில் களமிறங்குவார் என்று பலமாகவே ஊகிக்கப்படுகிறது. அத்தொகுதியின் இப்போதைய எம்பி மசீசவின் டான் ஆ எங். ஜோகூரில் 50விழுக்காட்டுக்குமேல் சீன வாக்காளர்களைக் கொண்ட ஒரு சில தொகுதிகளில் அதுவும் ஒன்றாகும்.