முன்னாள் எம்ஏசிசி தலைவர் சிலாங்கூர் எம்பி-இடம் மன்னிப்பு கேட்பார்

1khalidமலேசிய ஊழல்தடுப்பு ஆணைய (எம்ஏசிசி)த்தின் முன்னாள் தலைவர் அஹ்மட் சைட் ஹம்டான், நாளை கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமிடம் மன்னிப்பு கேட்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2009 ஹரி ராயா ஹாஜியின்போது காலிட் 24 மாடுகளைத் தானம் செய்ததில் அதிகார அத்துமீறல் நிகழ்ந்திருக்கலாம் என்று கூறியதற்காக சைட்(வலம்) மன்னிப்பு கேட்பார்.

1khalid1சைட் அவ்வாறு கூறியதற்காக காலிட் வழக்கு தொடுத்திருந்தார். வழக்கை இப்போது இரு தரப்புகளும் நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்த்துக்கொள்ள முடிவு செய்தன. இன்று காலை அம்முடிவு செய்யப்பட்டது.  நாளை அவர்களின் முடிவு நீதிபதி பாவ் பீ லான் முன்னிலையில் பதிவு செய்யப்படும்.

தீர்வின் விவரங்கள் நாளைதான் தெரியவரும். ஆனால், செலவுத்தொகை எதுவும் கோரப்போவதில்லை என காலிட் குறிப்புக் காட்டியுள்ளார்.

காலிட் தம் வழக்கில் சைட்டையும் அரசாங்கத்தையும் எதிர்வாதிகளாகக் குறிப்பிட்டிருந்தார்.

நான்காண்டுகளுக்குமுன் அஹ்மட் சைட், பினாங்கில் செய்தியாளர் கூட்டமொன்றில் பேசியபோது அப்துல் காலிட் மாடுகள் வாங்கியதிலும் சொந்தத்தில் ஆடம்பர கார் வைத்திருப்பதிலும் அதிகார அத்துமீறல் நிகழ்ந்திருப்பதாகக் குற்றம் சாட்டப்படலாம் என்று கூறியிருந்தார்.

ஆனால், ஓராண்டுக்குப் பின்னர் எம்ஏசிசி அவ்விவகாரங்கள் தொடர்பில் காலிட்மீது குற்றம்சாட்ட எதுவும் இல்லை என்று கூறியது. அதன் முடிவை ஆணையத்தின் நடவடிக்கை பரிசீலனை வாரியமும் உறுதிப்படுத்தியது.

அதன் தொடர்பில் காலிட் 2009 ஏப்ரல் 27-இல், அஹ்மட் சைட்மீது வழக்கு தொடுத்தார். அதில் அவர், அஹ்மட்டின் கருத்து தம்மை நேர்மையற்றவராகவும், ஊழல்வாதியாகவும், நம்பத்தகாதவராகவும், கொள்கையற்றவராகவும், குற்றம் செய்பவராகவும் நெறிதவறியவராகவும், பதவியைத் தவறாகப் பயன்படுத்திக்கொள்பவராகவும், தகுதியற்ற அரசியல்வாதியாகவும் சித்திரிக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

அஹ்மட் சைட் அப்படி ஒரு குற்றச்சாட்டைச் சுமத்தியதன்வழி “நடைமுறை நாகரிகத்தை மீறுவிட்டார்” என்று கூறிய காலிட் (இடம்) அது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும் தம் நற்பெயரைக் கெடுப்பதற்காகவே அவ்வாறு கூறப்பட்டது என்றும் சொன்னார்.

நீதிமன்றத்துக்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய காலிட், நல்லபடியாக தீர்வு காணப்பட்டதற்கு இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். பணத்துக்காக வழக்கு தொடுக்கவில்லை என்றும் ஒரு முஸ்லிம் என்ற முறையிலும் மந்திரி புசார் என்ற முறையிலும் தம் மதிப்பைக் காத்துக்கொள்ளவே வழக்கு தொடுத்ததாகவும் கூறினார்.