இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு உதவும் மலேசியத் தமிழர்களின் மனிதாபிமான செயலுக்கு யாரும் மாசு கற்பிக்க வேண்டாம். எட்டப்பர்களாக மாற வேண்டாம் என்று தெலுக் இந்தான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் மலேசிய தமிழர்ப் பணிப்படைக் குழு துணைத் தலைவருமான எம். மனோகரன் கேட்டுக்கொண்டார்.
ஈழத் தமிழர்களின் நல்வாழ்வுக்கும் மீள்குடியேற்றத்திற்கும் தமிழ் பேரவை மலேசியா பெர்ஹாட்டுக்கு, மலேசிய அரசாங்கம் 32 இலட்சம் வெள்ளி உதவி நிதி வழங்கியது. இது குறித்து விசாரிக்குமாறு பூச்சோங் முரளி எனப்படும் முரளி சுப்பிரமணியம் என்பரின் தலைமையில் சமூக ஆய்வாளர் என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொள்ளும் வரதராசு என்பரும் வடிவேலன் என்ற மற்றொரு நபரும் போலிஸ் மற்றும் எஸ்எஸ்எம் எனப்படும் கம்பனி பதிவிலாக்காவிடம் புகார் செய்துள்ளனர்.
அந்த நிதி ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தமக்கு நன்றாகவே தெரியும், அது சார்பாக என்னிடம் கேட்டிருந்தால் கூட பதில் கிடைத்திருக்கும். மாறாக, அது குறித்து புகார் செய்வதும் கேள்வி எழுப்புவதும் மகா கேவலம் ஆகும் என்று மனோகரன் சொன்னார்.
நாட்டில் எத்தனையோ ஊழல்கள் கிடக்கும் போது, இதில் ஏன் இவர்களுக்கு இவ்வளவு நாட்டம் என அவர் சாடினார்.
நம்முடைய இலட்சியம் ஈழத்தமிழர்களுக்கு உதவுவதுதான். ஆனால், நமக்கு நாமே தேவையற்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டு அவமானப்படுத்திக் கொள்கிறோம் என்றார்.
இது போன்ற கீழறுப்பு வேலைகளை தமிழினத் துரோகியாக இருக்கும் இலங்கை தூதரகத்தினர்தான் செய்வார்கள். அல்லது அவர்களது கூலிப்படை செய்வார்கள். ஆனால் அதை நமே செய்வது முட்டாள்தனமாக உள்ளது என்றார்.
தமிழர்ப் பணிபடைக் குழுவைச் சேர்ந்த தங்கள் இயக்கத்தினரே கேள்வி எழுப்புவது குறித்து செய்தியாளர்கள் மனோகரனிடம் கேள்வி எழுப்பிய போது, இதுகுறித்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக குறிப்பிட்டார்.