செல்வந்தரான தாஜுடின் ராம்லிக்கும் ஜிஎல்சி என அழைக்கப்படும் அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் இடையிலான பல பில்லியன் ரிங்கிட் பெறும் வழக்குகளுக்கு உலகளாவிய தீர்வின் விவரங்கள் அவருக்கும் அம்னோ வழக்குரைஞரான முகமட் ஹாபாரிஷாம் ஹருனுக்கும் மட்டுமே தெரியும் எனத் தோன்றுகிறது.
கடந்த அக்டோபர் மாதம் தாஜுடினுக்கு எதிரான வழக்குகள் முறையீட்டு நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் அவருடைய வழக்குரைஞர் லிம் கியான் லியோங் வழக்குகளைத் தள்ளி வைக்க விண்ணப்பித்துக் கொண்ட போது உலகளாவிய தீர்வு பற்றிப் பல முறை கூறப்பட்டுள்ளது. ஆனால் அதன் விவரங்கள் வெளியிடப்படவே இல்லை.
அதே வேளையில் சம்பந்தப்பட்ட ஜிஎல்சி-க்களின் வழக்குரைஞர்களுக்கும் தீர்வு விவரங்களும் யாருடன் தாஜுடின் பேச்சு நடத்துகிறார் என்பதும் தெரிவிக்கப்படவில்லை.
இரண்டாவது நிதி அமைச்சர் அகமட் ஹுஸ்னி ஹானாட்ஸ்லாவிடமிருந்து ஒப்புதல் கிடைத்த பின்னர் “அந்த விவகாரத்தை” கவனிப்பதற்கான அதிகாரம் தமக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் தெரிவித்த பின்னர் அந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
எம்ஏஎஸ் என்ற மலேசிய விமான நிறுவனத்துக்குத் தலைமை தாங்கிய போது அதற்கு 8 பில்லியன் ரிங்கிட்டுக்கு மேல் இழப்பு ஏற்படுவதற்குக் காரணமாக இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை தாஜுடின் எதிர்நோக்கியுள்ளார். அதே வேளையில் பல ஜிஎல்சி-க்களும் தாஜுடின் தங்களுக்குக் கொடுக்க வேண்டிய கடன்களுக்காக அவர் மீது வழக்குகளைப் போட்டுள்ளன.
இதனிடையே அந்த விவகாரம் பற்றி விவாதிக்க நேற்று மாலை நிகழ்ந்த கூட்டத்தில் அரசாங்கத்தின் முதலீட்டுக் கரமான கஸானா ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டும் சம்பந்தப்பட ஜிஎல்சி-க்களும் கலந்து கொண்டதாகத் தெரிகிறது.
கஸானாவின் சட்டப் பிரிவுத் தலைவர் முகமட் நஸ்ரி சலேஹுடின் ஏற்பாடு செய்த அந்தக் கூட்டத்தில் கஸானா, டெலிகோம் மலேசியா, செல்கோம், எம்ஏஎஸ், சிஐஎம்பி ஆகியவற்றின் பேராளர்களும் பங்கு கொண்டனர்.
தாஜுடினுனான தகராற்றைத் தீர்த்துக் கொள்ள அரசாங்கமும் நிதி அமைச்சும் ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறும் சர்ச்சைக்குரிய கடிதம் ஒன்றை நஸ்ரி அனுப்பிய ஒரு வாரத்தில் அந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
தாஜுடினுக்கு எதிராக வழக்குப் போட்டுள்ள ஜிஎல்சி-க்கள் தங்களைப் பிரதிநிதிப்பதற்கு அம்னோவுடன் அணுக்கமான தொடர்புகளைக் கொண்ட ஹாபாரிஷாம் வான் ஆயிஷா முபாராக் என்னும் சட்ட நிறுவனத்தை நியமிக்க வேண்டும் என்றும் நஸ்ரி குறிப்பிட்டிருந்தார்.
அந்த சட்ட நிறுவனம் நியமிக்கப்பட்டால் மட்டுமே தீர்வு விவரங்கள் வெளியிடப்படும்
ஹாபாரிஷாமை தங்களது வழக்குரைஞர்களாக நியமிப்பதற்கு ஜிஎல்சி-க்கள் ஒப்புக் கொண்டால் மட்டுமே உலகளாவிய தீர்வு விவரங்கள் அவற்றுக்குத் தெரிவிக்கப்படும் என நேற்றைய கூட்டத்தில் கூறப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
அது, பங்கு பரிவர்த்தனைச் சந்தையில் இடம் பெற்றுள்ள நிறுவனங்களை நடத்துவதில் முக்கியமான அம்சங்கள் எனக் கருதப்படும் நன்னெறிகள், வெளிப்படையான போக்கு, நிறுவன நிர்வாக விஷயங்கள் ஆகியவற்றை மீறுவதால் பலர் கவலை தெரிவித்துள்ளனர்.
அந்தக் கூட்டத்தின் பேசப்பட்ட விஷயங்களை வெளியிட ஹாபாரிஷாம் தொடர்பு கொள்ளப்பட்ட போது மறுத்து விட்டார். அந்தக் கேள்வியை கஸானாவிடம் எழுப்ப வேண்டும் என அவர் சொன்னார்.
“ஜிஎல்சி-க்கள் என்னை அதிகாரப்பூர்வமாக நியமிக்காததால் நான் எதுவும் சொல்ல முடியாது. நாங்கள் காத்திருப்பது நல்லது. ஜிஎல்சி-க்கள் முடிவு செய்ய அவகாசம் தேவை. ஜிஎல்சி-க்களிடமிருந்து முறையான உத்தரவுகளுக்காக நான் காத்திருக்கிறேன்”, என அந்தக் கூட்டம் பற்றிக் கேட்கப்பட்ட போது ஹாபாரிஷாம் சொன்னார்.