அன்வார்: நல்ல தலைவர்கள் ‘குட்டி நெப்போலியன்களை’ அடக்கி வைப்பர்

1anvar

பக்காத்தான் ரக்யாட் தலைவர் அன்வார் இப்ராகிம், நல்ல தலைமைத்துவம் சமத்துவம் பேசும் பக்காத்தானின் தேர்தல் கொள்கை அறிக்கையின்படி நடக்காத அரசுப்பணியில் உள்ள ‘குட்டி நெப்போலியன்களை’  அடக்கி வைக்கும் என்றார்.

பிகேஆர் நடப்பில் தலைவரான அன்வார், நேற்று தம் கட்சியின் ஜோகூர் பாரு தொகுதி ஏற்பாடு செய்திருந்த ஒரு கலந்துரையாடலில் பேசியபோது இவ்வாறு கூறினார். அதில் அம்மாநில என்ஜிஓ-களின் பிரதிநிதிகளும் சமூக ஆரவலர்களுமாக சுமார் 200 பேர் கலந்துகொண்டனர்.

1anvar1கலந்துரையாடலில் பேசிய அன்வார், தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருவதாக இந்தியர்கள் கொண்டுள்ள அச்சத்தைப் போக்கும் வகையில் பலவற்றை எடுத்துரைத்தார்.

அன்வாரிடம், மலேசியாவில் “மலாய்க்காரர் பிரச்னை என்றால் அது தேசிய பிரச்னையாகவும் சீனர் பிரச்னை என்றால் அது இனப் பிரச்னையாகவும் கருதப்படும் ஆனால், இந்தியர் பிரச்னை என்றால் அது கண்டுக்கொள்ளப்படுவதே இல்லை” என்ற கருத்து நிலவுவது பற்றி வினவப்பட்டது.

இதற்குத் தலைமைத்துவம்தான் காரணம் என்று அன்வார் கூறினார்.

நல்ல தலைமைத்துவம் என்றால் குறுகிய மனப்பான்மையுடன் செயல்படாமல் தேசிய முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்று கூறிய அவர் அதற்கு எடுத்துகாட்டாக ஒன்றைக் கூறினார். “நான் நிதி அமைச்சராக இருந்தபோது,  மலாய்க்காரர்-அல்லாத ஒருவர் (கிளிப்பர்ட் ஹெர்பர்ட்) அமைச்சின் தலைமைச் செயலாளாராக இருப்பது பற்றிக் கேட்கப்பட்டது”, என்றார்.

அன்வார் எட்டாண்டுகள் நிதி அமைச்சராக இருந்தபோது, ஹெர்பர்டின் நியமனத்தால் அதிருப்தியுற்றிருந்த மலாய்க்கார அரசு உயர் அதிகாரிகள் கொடுத்த அழுத்தத்தை ஒதுக்கித்தள்ளினார். மலேசிய பொருளாதாரம் பற்றி நன்கு அறிந்தவர் என்பதால் அம்மனிதர் அந்த இடத்தில் இருப்பதாகக் கூறினார்.

“தேசிய முன்னுரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நல்ல தலைமைத்துவம் என்றால் அரசுப்பணியாளர்களும் அதற்கேற்ப நடந்துகொள்வார்கள்”, என்று அன்வார் கூறினார்.

நாடற்ற இந்தியர்கள்

நாடற்ற மக்களாக இருக்கும்  இந்தியர் பிரச்னைக்குப் பக்காத்தான் ஆட்சிக்கு வந்த 100 நாள்களுக்குள் தீர்வு காணப்படும் என்று அண்மைக்காலமாகக் கூறப்பட்டு வந்திருப்பதை அறிவோம். அதையே நேற்றைய கலந்துரையாடலிலும் அன்வார் வலியுறுத்தினார்.

1anvar2மலேசியாவில் சுமார் 1/2 மில்லியன் பேர் நாடற்ற மக்களாக இருக்கலாம். இதில் பெரும்பாலோர் சுமார் 350,000 பேர் இந்தியர்கள் எனக் கருதப்படுகிறது. எஞ்சியோர் சீனர்கள், சாபா, சரவாக்கில் உள்புறங்களில் வசிக்கும் டாயாக்குகள், கடாசான்கள் ஆகீயோராவர்.

“அதற்காக, நேற்றுத்தான் சென்னையிலிருந்து வந்திறங்கிய ஒருவருக்கு குடியுரிமை கொடுக்கப்படும் என்று நான் சொல்ல வரவில்லை.

“பாத்தாங் காலியில் ஒருவர், 1943-இல் பிறந்தவர். இன்றுவரை அடையாள அட்டை இல்லை. அரை நூற்றாண்டுக்குப் பின்னரும் இப்படி ஒரு நிலை இருப்பது வெட்கக்கேடான விசயம்”, என்று பிகேஆர் ஆலோசகர் கூறவும் கூட்டத்தினர் படபடவென கைதட்டினர்.

தகுதியுள்ள மலேசியர்கள் குடியுரிமை பெறுவதற்குள்ள அடிப்படை உரிமை குறித்து எவரும் கேள்வி எழுப்ப முடியாது என்றாரவர்.

பல்கலைக்கழக நுழைவு பற்றி வினவப்பட்டதற்கு, “தரமான கல்வியை” ஊக்குவிக்கவும் நிலைநிறுத்தவும்  அது தகுதியை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்றார்.

“ஏழை மாணவர்களும் போதுமான தகுதி இல்லாதவர்களும் தேவையான கல்வித்தகுதி பெறுவதற்காக அவர்களுக்குக் கூடுதல் பயிற்சிகள் ஏற்பாடு செய்யப்படும்.

“உயர்கல்வியின் தரத்தை நிலைநிறுத்த தகுதி-அடிப்படையில்தான் நுழைவு என்பதை வலியுறுத்துவது அவசியம்”, என்றவர் சொன்னார்.

“தொடக்கநிலை பள்ளிகளிலும் இதே கொள்கையே கடைப்பிடிக்கப்படும். எல்லா மொழிப் பள்ளிகளுக்கும் உதவுவோம். அதே வேளை மெண்டரின் மொழிப் பள்ளியோ, தமிழ்ப் பள்ளியோ, அரபுப்  பள்ளியோ மாணவர்கள் மலாய்மொழியில் தேர்ச்சி பெற்றிருப்பதையும் இடைநிலைப் பள்ளிகளில் அவர்கள் ஆங்கிலத்தில் புலமை பெற்றிருப்பதையும் வலியுறுத்துவோம்”.

கலந்துரையாடல் ஒன்றரை மணி நேரம் நீடித்தது. கலந்துரையாடலின் முடிவில் பலத்த கரவொலி எழுப்பிக் கூட்டத்தினர் அன்வாருக்குப் பாராட்டுத் தெரிவித்தனர். அவர் அவ்விடத்தைவிட்டு அகலும்வரை கூட்டம் அவரை மொய்த்துக் கொண்டிருந்தது.