சபாவில் குடியேற்றக்காரர்களுக்கு விரைவாகக் குடியுரிமை வழங்கிய ‘அடையாளக் கார்டு திட்டமும்’ அந்தத் திட்டத்தில் அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டின் ஈடுபாடு எனக் கூறப்படுவதும் மலேசியப் பாதுகாப்புப் படைகளுக்கும் சுலு துப்பாக்கிக்காரர்களுக்கும் இடையில் லஹாட் டத்து இழுபறிக்கு முக்கியமான காரணம் எனப் பழி சுமத்தப்பட்டுள்ளது.
அடையாளக் கார்டு திட்டத்தை உருவாக்கியதில் பங்காற்றியுள்ளதாகக் கூறப்படும் மகாதீரே ‘உண்மையான தேசத் துரோகி’ என லஹாட் டத்து ஊடுருவல் மீது Solidariti Anak Muda Malaysia (SAMM) நேற்று நடத்திய மூன்று மணி நேர கருத்தரங்கில் பிரகடனம் செய்யப்பட்டது.
கோலாலம்பூர் சிலாங்கூர் சீனர் அசெம்பிளி மண்டபத்தில் நடைபெற்ற அந்த ஆய்வரங்கு முடிவில் SAMM தலைவரும் செகுபார்ட் என அழைக்கப்படும் பத்ருல் ஹிஷாம் ஷாஹாரின் அதனை அறிவித்தார்.
அந்த நிகழ்வில் சபாவைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்களும் அரசு சாரா அமைப்புக்களின் உறுப்பினர்களும் பேசினார்கள். அந்த ஊடுருவலை கூட்டரசு அரசாங்கம் கையாண்ட விதத்தை அவர்களில் பெரும்பாலோர் குறை கூறியதுடன் அடையாளக் கார்டு திட்டம் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தையும் கூட்டத்தினருக்கு விளக்கினர்.
“ஒரு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக சபா மக்கள் தொகை உயர்ந்தது தற்செயலாக நிகழ்ந்தது என மகாதீர் சொல்லிக் கொள்கிறார்,” என துவாரான் எம்பி வில்பிரெட் பூம்புரிங் கூறினார்.
“நாம் அவரை எப்படி நம்புவது ? அவர் மீண்டும் மீண்டும் பொய் சொல்கிறார். ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய்யைச் சொல்லிக் கொண்டே போக முடியாது.”
முதலாவது பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான், இந்த நாட்டில் சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் குடியுரிமை வழங்கியது குறித்துக் கேள்வி எழுப்பும் மகாதீர் ‘நன்றியில்லாதவர்’ என பாஸ் இளைஞர் பிரிவு தேர்தல் இயக்குநர் முகமட் சானி ஹம்சான் சாடினார்.
“சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் துங்கு குடியுரிமை கொடுத்திருக்கா விட்டால் மகாதீர் தந்தைக்கு யார் குடியுரிமை வழங்கியிருப்பார்கள்?” என அவர் வினவினார். அவர் மகாதீருடைய இந்திய வம்சாவளித் தந்தையைத் தான் அவ்வாறு குறிப்பிட்டார்.
அடையாளக் கார்டு திட்டத்தில் தமக்குச் சம்பந்தமில்லை என மகாதீர் மறுப்பதைக் காட்டும் வீடியோவை SAMM திரையிட்ட போது கூட்டத்தினரிடையே சலசலப்பு எழுந்தது.
அந்த நிகழ்வில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். சபாவைச் சேர்ந்த பலரும் அங்கிருந்தார்கள். கூட்டரசு அரசாங்கம் சபாவை நடத்தும் விதம் பற்றி அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
தேசிய இலக்கியவாதி ஏ சமாட் சைட்டும் அந்த நிகழ்வில் சிறிது நேரம் கலந்து கொண்டு பிஎன் -னைத் தாக்கும் கவிதை ஒன்றை வாசித்தார்.
அந்த ஆய்வரங்கில் தெரிவிக்கப்பட்ட விஷயங்கள் அடிப்படையில் நாடு முழுவதும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி சபா நிலைமை குறித்து விளக்கப் போவதாக செகுபார்ட் சொன்னார்.