முன்னாள் அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் அஜில் தமது குடும்பத்தினர் சிங்கப்பூரில் ஆடம்பர அடுக்கு மாடி வீடுகளைக் ( ‘கொண்டோ’-க்கள்) கொள்முதல் செய்ததைத் தற்காத்துள்ளார். என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தில் முதலீடு செய்வதற்காக கொடுக்கப்பட்ட அரசாங்க நிதி அவற்றை வாங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
தங்கள் நிறுவனமான என்எப்சி கடன் பெற முடியாததால் குடும்ப உறுப்பினர்கள் அந்த ‘கொண்டோ’-க்களை வாங்குவதற்குத் தங்கள் பெயரைப் பயன்படுத்தியதாக வழக்குரைஞர் ரஞ்சித் சிங் குறுக்கு விசாரணை செய்த போது அவர் சொன்னார்.
ஷாரிஸாட், பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி ராம்லி, பிகேஆர் மகளிர் தலைவி சுராய்டா கமாருதின் ஆகியோர் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
“என்எப்சி தொடக்க நிறுவனம் என்பதால் சிங்கப்பூர் சட்டப்படி அது அந்த நாட்டில் கடனுக்கு விண்ணப்பிக்க முடியாது என எனக்குக் கூறப்பட்டது. அதனால் அவர்கள் தங்கள் சொந்தப் பெயர்களில் அந்த ‘கொண்டோ’-க்களை வாங்கினர்,” என அவர் இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் கூறினார்.
என்றாலும் அவற்றை வாங்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட பணம் அரசாங்கம் என்எப்சி-க்குக் கொடுத்த 250 மில்லியன் ரிங்கிட் கடனிலிருந்து எடுக்கப்பட்டதா என்பதை ஷாரிஸாட்டால் உறுதிப்படுத்த முடியவில்லை.
அத்துடன் என்எப்சி-க்காக தமது குடும்பப் பெயரில் எத்தனை கொண்டோக்கள் சிங்கப்பூரில் வாங்கப்பட்டன என்பதையும் அவரால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் ஒரு கொண்டோ வாங்கப்பட்டதை அவர் உறுதி செய்தார்.
சிங்கப்பூர் அந்தோனி சாலையில் 2,282 சதுர அடி பரப்புள்ள ஆடம்பர அடுக்குமாடி வீட்டை ஷாரிஸாட்டின் கணவர் முகமட் சாலேயும் பிள்ளைகளாம வான் ஷாஹினுர் இஸ்ரான் முகமட் சாலேயும் வான் இஸ்ஸானா பாத்திமா ஸாபேடா முகமட் சாலேஇயும் வாங்கியுள்ளதாக 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிகேஆர் கூறிக் கொண்டது. .
மரினா பே-யில் 34.6 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள மேலும் இரண்டு ஆடம்பர அடுக்கு மாடி வீடுகளையும் ஷாரிஸாட் குடும்பம் கொள்முதல் செய்துள்ளதாகவும் ராபிஸி பின்னர் கூறிக் கொண்டார்.