‘இப்போது தொடக்கம் 100 அல்லது 200 ஆண்டுகள் வரையிலான’ எதிர்காலத் தலைமுறையினருக்கு வழிகாட்டியாக விளங்கும் பொருட்டு ரோஸ்மா மான்சோரின் சுய சரிதை பள்ளிக்கூடங்களுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஆலோசனை கூறியிருக்கிறார்.
“நமது பிள்ளைகள் மற்ற பக்கத்தையும் படிப்பதை அது உறுதி செய்யும்,” என அவர் கோலாலம்பூரில் 180 பக்கங்களைக் கொண்ட அந்தப் புத்தகத்தை இன்று பிற்பகல் வெளியிட்ட போது கூறினார்.
“நமது தலைவர்கள் தங்கள் அனுபவத்தையும் கண்ணோட்டத்தையும் எழுத வேண்டும் என நான் எப்போதும் கூறி வந்துள்ளேன். இப்போது தொடக்கம் 100 அல்லது 200 ஆண்டுகள் வரையிலான’ எதிர்காலத் தலைமுறையினருக்கு வழிகாட்டியாக விளங்கக் கூடிய நல்ல புத்தகம் அதுவாகும்.”
ரோஸ்மா குறித்த ‘பொய்களையும் பொறாமையையும்’ முறியடிப்பதற்கு அந்தப் புத்தகம் உதவும் என அதன் வெளியீட்டாளரான Yayasan Amanah Perdana தெரிவித்துள்ளது.
ரோஸ்மாவுக்காக தாம் அனுதாபப்படுவதாகக் குறிப்பிட்ட மகாதீர், காரணம் பல ஆண்டுகளாக பொய்களுக்கும் கண்டனங்களுக்கும் தாம் இலக்காகி வந்துள்ளதாக சொன்னார்.
“நான் என் நினைவுகளை வெளியிட்டேன். தலைவர் என்ற முறையில் என்னுடைய கால கட்டத்தைப் பற்றிய உண்மைகளை அதில் எழுதியிருந்தேன். இருந்தும் மக்கள் என்னைப் பற்றிப் பொய் சொல்லுகின்றனர்,” என்றார் அவர்.
மலேசியர்கள் அதிகமாக எழுதுவதில்லை எனக் குறிப்பிட்ட மகாதீர் அதனால் நாட்டு வரலாறு மீது போதுமான தகவல்கள் இல்லை என்றார்.
“நான் வரலாற்றைப் பற்றிப் படிக்க விரும்பும் போது போதுமான மேற்கோள் புத்தகங்கள் கிடைப்பது இல்லை. ஏனெனில் கடந்த காலத்தில் மக்கள் தங்கள் அனுபவங்களைப் பதிவு செய்வது இல்லை.”
அந்த சுய சரிதையில் ரோஸ்மாவின் இளமைக் காலம் தொடக்கம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மனைவி என்ற நடப்பு காலம் வரையிலான விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
அந்தப் புத்தகம் கடந்த ஜனவரி மாதமே வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்றும் அதற்கு அச்சிடுவதற்குத் தாமதம் ஏற்பட்டதே காரணம் என்றும் ரோஸ்மா பொறுப்பல்ல என்றும் வெளியீட்டாளர் அறிவித்துள்ளார்.
சித்தி ரோஹாயா அத்தான், நோராய்னி அப்துல் ரசாக் ஆகியோர் எழுதியுள்ள அந்தப் புத்தகத்தின் விலை 150 ரிங்கிட் ஆகும். அதன் விற்பனை மூலம் இது வரை 500,000 ரிங்கிட் சேர்ந்துள்ளது.