பினாங்கு மஇகா இளைஞர் தலைவர் ஜே தினகரன், டிஏபி சட்டமன்ற உறுப்பினரும் அவரது உதவியாளரும் அதிகார அத்துமீறலிலும் ஊழலிலும் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறிக் கொண்டதின் தொடர்பில் இரண்டு அவதூறு வழக்குகளை இப்போது எதிர்நோக்கியுள்ளார்.
ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயரும் அவரது உதவியாளர் சிவலிங்கம் சண்முகமும் அந்த
வழக்குகளை இன்று பினாங்கு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள்.
இரண்டு செய்தி இணையத் தளங்களான கோலாலம்பூர் போஸ், பிரி மலேசியா டுடே ஆகியவற்றில் முறையே
மார்ச் 8ம் தேதியும் மார்ச் 11ம் தேதியும் சேர்க்கப்பட்ட தினகரன் அறிக்கைகளுக்காக அவர்கள் சிறப்பு
இழப்பீடுகளையும் மன்னிப்பையும் கோரியுள்ளனர்.
“அந்த குற்றச்சாட்டுக்களை அவரும் அவரது ஊழியர்கள் அல்லது முகவர்கள் திரும்பக் கூறுவதற்கும் தடை
விதிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் இழப்பீடுகளையும் கோருகிறோம்,” என ராயர்
சொன்னார்.
தினகரன் தமது எதிர்வாதத்தை 14 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டும்.
ராயரும் சிவலிங்கமும் “லஞ்சம் கொடுத்ததின் மூலமும் லஞ்சம் வாங்கியதின் மூலமும் ஊழல்
நடவடிக்கைகளில்”சம்பந்தப்பட்டுள்ளனர் என்ற நேரடியாகக் கூறியதின் வழி தினகரன் “பொறுப்பற்ற முறையிலும் தவறாகவும் கெட்ட நோக்கத்துடனும்” அந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளதாக வழக்கு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள ஊழல் புகார் மீதான முடிவுகளுக்கு ராயர்
காத்திருந்திருக்க வேண்டும் என தொடர்பு கொள்ளப்பட்ட போது தினகரன் கூறினார்.
தாம் விளைவுகளை எதிர்நோக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் சொன்னார்.
மாவட்ட அலுவலகம் ஒன்றுக்கு microwave oven ஒன்று அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டதின் தொடர்பில் மார்ச்
18ம் தேதி ராயர், சிவலிங்கம் ஆகியோருக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் தினகரன் புகார்
செய்திருந்தார்.
ஊழியர் ஒருவருக்கு எதிராக கொடுக்கப்பட்ட திருட்டுப் புகாரை மீட்டுக் கொள்ளுமாறு பினாங்கு இந்து அற
வாரியத்தின் துணைப் பொருளாளருக்கு உத்தரவிட்டு ராயர் ‘அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தினார்’ என்றும் தினகரன் தெரிவித்திருந்தார்.
ராயாரின் மாமாவான சிவலிங்கம் உறவினர் ஒருவருக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும்
அவர் குற்றம் சாட்டினார்.
அந்தக் குற்றச்சாட்டுக்களை ராயரும் சிவலிங்கமும் மறுத்துள்ளனர்.