சபா, லஹாட் டத்து, சுலு ஊடுருவலுடன் தம்மை பிலிப்பின்ஸ் அதிபர் அக்கினோ ஒரு போதும் தொடர்புபடுத்தவில்லை என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் விளக்கியுள்ளார்.
பிலிப்பின்ஸில் உள்ள எதிர்க்கட்சிகளே அந்த ஊடுருவலில் சம்பந்தபட்டிருக்கலாம் என அக்கினோ தெரிவித்தார் என பிலிப்பினோ வட்டாரங்கள் தம்மிடம் கூறியதாக அவர் சொன்னார்.
அன்வார் இன்று பிகேஆர் தலைமையகத்தில் நிருபர்களிடம் பேசினார்.
“மலேசியாவில் உள்ள எதிர்த்தரப்பாகிய எங்களைப் பற்றிக் குறிப்பிடப்படவே இல்லை,” என்றார் அவர்.
என்றாலும் தாம் சம்பந்தப்பட்டுள்ளதாக மலேசிய அதிகாரிகள் உறுதி செய்தாலும் தாம் வியப்படையப் போவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
“அந்த முழு அத்தியாயத்திலும் எங்கள் மீது குற்றம் சாட்டப்படும் எனச் சந்தேகம் கொள்வதற்கு தகுந்த காரணம் உள்ளது,” என்றும் அன்வார் கூறினார்
பிப்ரவரி 9ம் தேதி தொடங்கிய ஊருவலுக்குப் பின்னணியில் மலேசியாவிலும் பிலிப்பின்ஸிலும் உள்ள எதிர்க்கட்சிகள் இருப்பதாக அக்கினோ தெரிவித்தார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமக்கு எதிராகவோ அல்லது தமது தரப்புக்கு எதிராகவோ குற்றம் சாட்டப்பட்டால் இறுதி வரை போராடப் போவதாகவும் அன்வார் கூறினார்.
“அவர்கள் (பிஎன்) என்னைத் தொடர்புபடுத்த முயற்சி செய்கின்றனர். எனக்கு எதிராகக் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் மீது அமைச்சர்களும் பிரதமரும் தெரிவித்துள்ள கருத்துக்களைப் பார்க்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது,” என அவர் வலியுறுத்தினார்.