நாட்டின் ஆறாவது பிரதமரைப் போல தாம் ஒரு போதும் நடந்து கொண்டதில்லை என்றும் தமது கணவர் நஜிப் அப்துல் ரசாக் வகிக்கும் அந்தப் பதவியைப் பறிக்க ஒரு போதும் முயன்றதில்லை என்றும் ரோஸ்மா மான்சோர் கூறுகிறார்.
அந்தக் குற்றச்சாட்டு முதன் முறையாக எழுந்த போது அந்தப் பதவியைப் பிடிப்பதற்கான எண்ணம் தமக்கு இல்லை என நஜிப்புக்கு தாம் உறுதி அளித்ததாக ரோஸ்மா நேற்று வெளியிடப்பட்ட தமது சுய சரிதையில்
குறிப்பிட்டுள்ளார்.
“நான் நஜிப் ரசாக்கின் மனைவியாக மட்டுமே இருக்க விரும்புகிறேன். அவர் சாதாரண மனிதராக இருந்தாலும் நான் அவருடன் தான் இருப்பேன்,” என அவர் சொன்னதாக அந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
தமக்கு எதிராக அந்தத் தவறான எண்ணம் உருவானதற்கு பொறாமையும் ‘முதலாவது தலைவராக’ விரும்பும் யாரோ ஒருவருடைய விருப்பமுமே காரணம் என ரோஸ்மா கூறிக் கொண்டார்.
“அந்த மேலோட்டமான எண்ணத்தைக் கொண்டுள்ளவர்கள் வரலாற்றையும் கூட்டரசு அரசமைப்பையும் ஆய்வு செய்வது நல்லது.”
“நான் நாடாளுமன்ற உறுப்பினராகக் கூட இல்லாத போது நான் எப்படிப் பிரதமராக முடியும் ? நான் சாதாரண
அம்னோ உறுப்பினர். எந்த அதிகாரமும் இல்லாதவர்,” என அவர் அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.