தி கியாட் களமிறக்கப்பட்டால் சொய் லெக் பதவி விலகுவாராம்

1mcaமசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக், தம் பரம வைரியான ஒங் தி கியாட்டை பாண்டான் இண்டா நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக பிஎன் களமிறக்கினால் பதவி விலகப்போவதாகக் கூறியிருப்பதாக தெரிகிறது.

1mca1நேற்று  கட்சியின் மத்திய செயல்குழுக் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறியதாக சில வட்டாரங்களை மேற்கோள்காட்டி அறிவித்துள்ள சைனா பிரஸ், ஒங் தவிர்த்து, கட்சி தலைமைச் செயலாளர் கொங் சோ ஹா, உதவித் தலைவர் இங் யென் யென் (வலம்) ஆகியோரும் மசீச வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்றது.

முன்னாள் தலைமைச் செயலாளரும் முன்னாள் தலைவர் ஒங் கா திங்-கின் தமையனாருமான ஒங் கா சுவானும் தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைத்துக்கொள்ள போட்டியிட மாட்டார்.

சுவா போட்டியிடுவார் ஆனால், எங்கு போட்டியிடுவார் என்பது தெரியவில்லை.

1mca tan2008 தேர்தலில், பண்டார் துன் ரசாக் தொகுதியில், சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமிடம் தோற்றுப்போன   பொருளாளர் டான் சாய் ஹோ (இடம்) மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு இழந்த இடத்தைத் திரும்பப் பெற முயல்வார்.

மசீச இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளை- வங்சா மாஜுவையும் குவாந்தானையும்- அம்னோவுக்குக் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளது. அதற்குப் பதிலாக வேறு தொகுதிகள் கொடுக்கப்படுமா என்பது தெரியவில்லை.

மசீச தன் வேட்பாளர் பட்டியலை இறுதிசெய்ய வியாழக்கிழமை மீண்டுமொரு கூட்டம் நடத்தும் எனவும் அச்செய்தி அறிக்கை கூறியது.

வேட்பாளர் பட்டியலில்  தம் பெயர் இல்லை என்பது தமக்குத் தெரியாது என கொங் சைனா பிரஸிடம் தெரிவித்துள்ளார்.

மசீச துணைத் தலைவர் லியோ தியோங் லாய், நேற்றைய கூட்டத்தில் வேட்பாளர்கள் பற்றியோ தொகுதிகளை மாற்றிக்கொள்வது பற்றியோ விவாதிக்கவில்லை என்றார்.