அகோங்கிற்கு எதிராக போர் தொடுத்ததாக எட்டுப் பிலிப்பினோக்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது

troopsபயங்கரவாதத்தில் ஈடுபட்டதாகவும் யாங் டி பெர்துவான் அகோங்கிற்கு எதிராகப் போர் தொடுத்ததாகவும்  தென் பிலிப்பின்ஸைச் சேர்ந்த எண்மர் மீது இன்று குற்றம் சாட்டப்பட்டது.

லஹாட் டத்து மாவட்டப் போலீஸ் தலைமையகத்தில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் அவர்கள் மீது அந்தக்
குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

பயங்கரவாதக் கும்பல் ஒன்றின் உறுப்பினர்களாக இருந்ததாக குற்றவியல் சட்டத்தின் பிரிவு 130ஏ-யின் கீழ் 17
வயதுக்கும் 66 வயதுக்கும் இடைப்பட்ட அந்த ஆடவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்தப் பிரிவு
ஆயுள் காலச் சிறைத் தண்டனையை விதிக்க வகை செய்கின்றது.

அதே சட்டத்தின் 121வது பிரிவின் கீழ் அவர்கள் மீது யாங் டி பெர்துவான் அகோங்கிற்கு எதிராகப் போர்
தொடுத்ததாக இன்னொரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது. அதன் கீழ் அவர்கள் குற்றவாளி எனத்
தீர்ப்பளிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம்.

மாஜிஸ்திரேட்டாக செயல்பட்ட செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அமெலாத்தி பார்னெல் அவர்கள் குற்றம்
சாட்டப்பட்டனர்.

புத்ராஜெயா சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தைச் சேர்ந்த டிபிபி முகமட் டுசுக்கி மொக்தாரும் வழக்குத்
தொடரும் பிரிவின் துணைத் தலைவர் நோர்டின் ஹசானும் அரசு தரப்பு சார்பில் ஆஜரானார்கள்.

அந்த வழக்கு தாவாவ்-வில் உள்ள உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக  முகமட் டுசுக்கி நிருபர்களிடம் கூறினார்.

அந்த எண்மரும் சொஸ்மா எனப்படும் 2012ம் ஆண்டுக்கான பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்)
சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதாக அவர் சொன்னார்.

நீதிமன்றத்தில் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்லும் காணப்பட்டார்.

மாவட்ட போலீஸ் தலைமையகத்தைச் சுற்றிலும் ஆயுதப்படை வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.

பெர்னாமா