தேர்தல் பார்வையாளர்களாக 5 ஆசியான் நாடுகளுக்கு மட்டுமே அழைப்பு

1ecதேர்தல் ஆணையம் (இசி) 13வது பொதுத் தேர்தலைப் பார்வையிட ஐந்து ஆசியான் நாடுகளையும் ஆசியான் செயலகத்தையும் சேர்ந்த மொத்தம் 42 பார்வையாளர்களை மட்டுமே அழைப்பதென முடிவு செய்துள்ளது. எனவே, பார்வையாளர்களை அனுப்பிவைக்க அனுமதி கேட்டு மற்ற நாடுகள் செய்யும் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டா.

தாய்லாந்து, இந்தோனேசியா, கம்போடியா, பிலிப்பீன்ஸ், பர்மா ஆகியவையே அந்த ஐந்து ஆசியான் நாடுகளாகும்.

ஒவ்வொரு நாடும் ஆசியான் செயலகமும் ஏழு பார்வையாளர்கள்வரை அனுப்பி வைக்கலாம்.

1ec1நேற்றிரவு கோலாலும்பூரில், மலேசிய வெளிநாட்டுச் செய்தியாளர்கள் மன்றத்தில் ஒரு விளக்கமளிப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட இசி துணைத் தலைவர் வான் அஹ்மட் வான் ஒமார் இவ்வாறு அறிவித்தார்.

ஏன் அந்த ஐந்து ஆசியான் நாடுகளுக்கு மட்டுமே அழைப்பு என்ற வினவலுக்கு அவை அருகில் இருப்பதும் அவற்றின் தேர்தல்களின்போது மலேசியாவைப் பார்வையாளராக அழைத்திருப்பதும் காரணங்களாகும் என்றவர் விளக்கினார்.

மற்ற நாடுகளும் பார்வையாளர்களை அனுப்பிவைக்க அனுமதி கேட்டால்………

“மன்னிக்க வேண்டும். அவர்களின் கோரிக்கைகளை ஏற்பதற்கில்லை. ஆனால், கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதிக்கு அப்பாலிருந்து அவர்கள் எப்போதுமே பார்வையிடலாம்”, என்றாரவர்.

வாக்களிப்பு மையங்கள், வேட்புமனு தாக்கல் செய்யும் மையங்கள், வாக்கு எண்ணும் மையங்கள் முதலியவை கட்டுப்படுத்தப்படுத்தப்பட்ட பகுதிகளாகும். அனுமதியுள்ளவர்கள் மட்டுமே அந்த இடங்களில் நுழையலாம்.