மலாக்காவில் தியான் செராமாவுக்கு மீண்டும் இடையூறு

tianமலாக்காவில் நேற்றிரவு பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா கலந்து கொண்ட செராமா நிகழ்வுக்கு மீண்டும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

பிகேஆர் மலாக்கா அலுவலகத்துக்கு வெளியில் இரவு மணி 10.45 வாக்கில் ஈராயிரம் ஆதரவாளர்களிடம்
தியான் சுவா பேசிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் கூட்டத்தினர் மீது முட்டைகளை
வீசியதாக மலாய் மொழி ஏடான சினார் ஹரியான் தெரிவித்தது.

ஆனால் அந்த முட்டைகள் ஆதரவாளர்களுடைய கார்களை மட்டுமே தாக்க முடிந்தது. போலீசார்
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாகவும் அது மேலும் கூறியது.

லஹாட் டத்து ஊடுருவலுக்கு அம்னோ திட்டமிட்டது என தாம் குற்றம் சாட்டியதாக கூறப்படுவது தொடர்பில்
தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள தேச நிந்தனைக் குற்றச்சாட்டு பற்றி தியான் சுவா செராமாவில் பேசியதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.

செராமா நிகழ்ந்த இடத்திலிருந்து 15 மீட்டர் தொலைவில் பிஎன் ஒரு முகாமை அமைத்திருந்தது என்றும்
‘ஒலிபெருக்கி போரைத் தவிர’ அந்தப் பகுதியில் விரும்பத்தகாத சம்பவம் ஏதும் நடைபெறவில்லை என்றும்
அந்த ஏடு குறிப்பிட்டது.

சுவா தியான் சாங் என்ற உண்மையான பெயரைக் கொண்டுள்ள தியான் சுவா, பிப்ரவரி மாத இறுதியில் அந்தக்
கருத்தைச் சொன்னதாக கூறப்பட்ட பின்னர் செராமா நிகழ்வுகளில் அவர் தொடர்ந்து மருட்டப்பட்டு வருகிறார்.

அவர் அதனை மறுத்துள்ள போதிலும் பினாங்கில் இரண்டு முறையும் கெடாவில் ஒரு முறையும் அவரது
செராமாக்களுக்கு இடையூறு செய்யப்பட்டது. அந்தக் கருத்து மீது மார்ச் 11ம் தேதி பெட்டாலிங் ஜெயாவில்
உள்ள பிகேஆர் தலைமையகத்துக்கு வெளியில் ஒர் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. பிஎன் ஆதரவுக்
கும்பல்கள் முட்டைகளையும் கம்புகளையும் கற்களையும் அந்த அலுவலகத்தின் மீது வீசின.

அத்துடன் கடந்த வாரம் பிகேஆர் மலாக்கா அலுவலகத்துக்கு முன்பு மாலை போடப்பட்ட தியான் சுவா
உருவப்படத்துடன் மாதிரிச் சவப்பெட்டி ஒன்று வைக்கப்பட்டிருந்தது.