நாடாளுமன்றம் எந்த நேரத்திலும் கலைக்கப்படலாம் என்ற நிலை இருந்தாலும், 13வது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான பிஎன் வேட்பாளர் பட்டியல் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
“இன்னமும்கூட வேட்பாளர்கள் நியமனம் பற்றிய பேச்சுகளும் வேட்பாளராவதற்கு ஆதரவுதேடும் முயற்சிகளும் தொடர்கின்றன”, என்று மாநில பிஎன் தலைவர் தெங் சாங் இயோ (வலம்), மலேசியாகினியின் இணைய தொலைக்காட்சியான கினிடிவி-க்கு வழங்கிய நேர்காணலில் கூறினார்.
“பட்டியலை ஆராய்ந்து பார்த்து விட்டோம். அது ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது……ஆனாலும் சில மனக்குறைகள் இருக்கின்றன. இப்போது பட்டியலுக்கு இறுதிவடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது”, என்றார் தெங்.
என்றாலும், சில இடங்கள் மட்டுமே இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் பட்டியலில் பெரிய மாற்றம் இராது என்றும் அந்த கெராக்கான் தலைமைச் செயலாளர் கூறினார்.
நாடாளுமன்றம் எந்த நேரத்திலும் கலக்கப்படலாம். அது கலைக்கப்படாவிட்டாலும் ஏப்ரல் 28-இல் இயல்பாகவே கலைந்துவிடும். அதன்பின், ஜூன் 28-க்குள் பொதுத் தேர்தலை நடத்தியாக வேண்டும்.
ஆறு பிஎன் தொகுதிகளில் இழுபறி
பினாங்கில் பெரும்பாலான இடங்களுக்கு வேட்பாளர் நியமனம் தீர்மானிக்கப்பட்டு விட்டது என்று கூறிய தெங் சில இடங்களுக்கு மட்டுமே வேட்பாளர்களைத் தீர்மானிக்க வேண்டியுள்ளது என்றார். கெராக்கானைப் பொறுத்தவரை மூன்று இடங்களுக்கு வேட்பாளர்கள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
அம்னோவிலும் அப்படித்தான் என்று கூறியவருக்கு மசீசவின் நிலை பற்றி உறுதியாக எதையும் சொல்ல முடியவில்லை.
“இது ஒரு பெரிய பிரச்னை அல்ல. ஆங்காங்கே சிறுசிறு விசயங்களுக்குத்தான் தீர்வு காண வேண்டியுள்ளது. பெரிய விவகாரங்களுக்கெல்லாம் தீர்வு கண்டு விட்டோம்.
“நாடாளுமன்றக் கலைப்புக்குமுன்னர் இவ்வளவு விரைவாக இதற்குமுன் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டதில்லை”, என்றாரவர்.
வேட்பாளர்களில் 40 விழுக்காட்டினர் புது முகங்கள் என்று நஜிப் அறிவித்திருந்ததைப் பற்றிக் குறிப்பிட்ட தெங், பினாங்குக்கும் அது பொருந்தும் என்றார்.
எவை போட்டி மிகுந்த இடங்கள், பிஎன் குறிவைக்கும் இடங்கள் எவை என்று வினவியதற்கு, “நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும் எங்கள் கவனம் எங்கே, எங்கள் முயற்சிகள் எங்கே என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்”, என்றார்.
தெங் இப்போது பெரும்பாலும் பினாங்கு பெருநிலத்தில்தான் காணப்படுகிறார். அதனால் அவர் புக்கிட் தெங்காவில் போட்டியிடலாம் என்று ஊகிக்கப்படுகிறது.